இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெட்டி துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி சோனி குமாரி என்பவரது என்பதும்,
மாத ஊதியத்தை வலுயுறுத்தி கேட்டதால் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் Manjeet Karketa என்ற இளைஞரை கைது செய்துள்ள பொலிசார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியை சேர்ந்தவர் 15 வயதேயான சிறுமி சோனி குமாரி. ஏழ்மையில் இருந்த இவரது குடும்பத்தினரிடம் பேசி மாதம் 6,500 ஊதியம் பெற்றுத்தருவதாக கூறி டெல்லிக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் டெல்லியில் உள்ள தொழிலதிபர் ஒருவரது குடியிருப்பில் பணிக்கு சேர்த்துள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக குறித்த சிறுமிக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை அவருக்கு தராமல் Manjeet Karketa கைப்பற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் தமது ஊதியத்தை திருப்பித் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த சோனியை 3 பேர் கொண்ட கும்பலுடன் இணைந்து Manjeet Karketa கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை 12 துண்டுகளாக வெட்டி கழிவு நீர் ஓடையில் வீசியுள்ளார். அடுத்த நாள் அந்த பகுதியில் சென்ற நபர் ஒருவர் கண்ணில் இந்த உடல் பாகங்கள் சிக்கியுள்ளது.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அதில் இருவர் பைகளில் ஏதோ பொருட்களை எடுத்துச் சென்று ஓடையில் வீசுவது பதிவாகியிருந்தது.
இதனையடுத்து சிறுமியின் முகத்தை புகைப்படம் எடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார் Manjeet Karketa என்பவரை கைது செய்துள்ளனர்.