திண்டுக்கல்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்.
இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலசக்தி (வயது 4) மற்றும் விஜிதா (வயது 2) .
கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் இன்றும் சரவணனுக்கும் லட்சுமிக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.
இதையடுத்து தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு லட்சுமி வீட்டிலிருந்து வெளியே வந்து சித்தூர் செல்லும் சாலை அருகே உள்ள தனியார் தோட்டத்து கிணற்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது குழந்தைகளை ஒவ்வொன்றாக கிணற்றில் வீசிவிட்டு அவரும் கிணற்றுக்குள் குதித்து உள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கும் மற்றும் வத்தலகுண்டு தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் குதித்த லட்சுமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கிணற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட லட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களை வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாய் தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தற்கொலை செய்து கொண்டது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.