பெங்களூரு…
நூதன முறையில் திருடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை, வீடு கொள்ளை, நகைக் கடை கொள்ளை என பல கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த கொள்ளை சம்பவங்களை பல நாள் திட்டம் போட்டு அரங்கேற்றுவது வாடிக்கை.
சமீபத்தில் இரவில் திருடினால் மாட்டிக் கொள்வோம் என பகலில் மெக்கானிக் என ஏடிஎம்இல் புகுந்து கொள்ளையடித்தனர்.
இதில் விசித்திரம் என்னவென்றால் ஏடிஎம்-ல் பணத்தை கொள்ளையடிக்க வரவில்லை அதற்கு பதிலாக ஏடிஎம் மெஷினில் இருக்கும் பேட்டரிகளை கொள்ளையடிக்க வந்தனர்.
யாராவது வந்து கேட்டால் மெக்கானிக் என சொல்லிக்கொண்டு கொள்ளையடித்தனர். அதேப்போன்று ஒரு சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது.
கடந்த சில மாதங்களாவே பெங்களூரு முழுவதும் போக்குவரத்து சிக்னல் பேட்டரி திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் குழப்பமடைந்த போலீசார் இந்த திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தொடர்ந்து போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிய குற்றச்சம்பவத்தில் கணவன்-மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதிகள் பெங்களூரு, சிக்கபனாவரத்தைச் சேர்ந்த எஸ் சிக்கந்தர் 30 மற்றும் அவரது மனைவி நஸ்மா சிக்கந்தர் 29 என தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஜூன் 2021 மற்றும் ஜனவரி 2022 மாதமிடையே பெங்களூரு நகரம் முழுவதும் உள்ள 68 போக்குவரத்து சந்திப்புகளில் இருந்து 230 க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியுள்ளதாக கூறியுள்ளனர்.