24 மணிநேரத்தில் 250 முறை நிலநடுக்கம்! எரிமலை வெடித்தது- வெளியேறும் மக்கள்!!

520

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து புவியலாளர்கள் எந்த நேரத்திலும் எரிமலை வெடிக்கலாம் என்று இரண்டு நாட்களுக்குமுன் எச்சரித்திருந்தபடியே Kilauea என்னும் எரிமலை வெடித்தது.

நகரங்களுக்குள்ளேயும் எரிமலைக் குழம்பு பீறிடத்தொடங்கியது. சாலைகளில் விரிசல்கள் விழத்தொடங்கியதையடுத்து எந்நேரமும் எரிமலைக் குழம்பு வெளியேறலாம் என்பதால் 10,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தீவு முழுவதும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சைரன் ஒலிக்கச் செய்யப்பட்டது.தீவுவாசி ஒருவர் 150 அடி உயரத்திற்கு விண்ணில் எரிமலைக் குழம்பை எரிமலை கக்கியதைக் கண்டதாகக் கூறினார்.

பல இடங்களைக் கரும்புகை சூழ்ந்துள்ளது. தற்போது நிலப்பரப்பை உடைத்துக் கொண்டு எரிமலைக் குழம்பு வெளி வரும் காட்சிகளைக் கொண்ட அச்சத்தை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

மற்றொரு வீடியோவில் கார்கள் பயணிக்கும் சாலை ஒன்றில் சாலையின் நடுவே இருந்து எரிமலைக் குழம்பு பீய்ச்சியடித்துக் கொண்டு வெளிவரும் காட்சி பதிவாகியுள்ளது.

வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தங்குவதற்காக அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் ஒரு அவசர கால முகாம் ஒன்றை அமைத்துள்ளது.

ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நில நடுக்கம் ஒன்றையடுத்து Kilauea எரிமலை வெடித்தது.

தொடர்ந்து சில நாட்களாகவே நில நடுக்கங்கள் ஏற்பட்டு வந்ததைத் தொடர்ந்து நிலவியலாளர்கள் எரிமலை வெடிப்பு ஏற்படும் என்பதை மிகச் சரியாகக் கணித்தனர்.

மேலும் எரிமலை வெடிப்புகள் தொடரலாம் என்பதால் நாளொன்றிற்கு 500 முதல் 2000 பேர் வரை சுற்றுலா வரும் இடமான ஹவாய் தீவுகளுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.