திருமணமான 25 நாட்களிலேயே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக பணியாற்றுபவர் பாலகுரு.
இவருக்கு கடந்த மே 30-ம் தேதி வேலம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவன், மனைவி இடையே சுமுகமான உறவு நீடித்த நிலையில், வேலம்மாள் வேறு ஒரு நபருடன் போனில் பேசியதை பார்த்த பாலகுரு கோபமடைந்தார்.
இதனால், கடந்த சில தினங்களாக பாலகுருவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார் பாலகுரு. இருவரும் பாளையங்கோட்டை பொட்டல் கிராமத்தின் அருகே வந்தபோது வேலம்மாளை தலையை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.பின்னர், வேலம்மாள் தலையை தூக்கிவீசியுள்ளார்.
அதன்பின்னர், தானாகவே காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றபோது தான் நர்சிங் படித்து வந்த வேலம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலிக்க தொடங்கினோம்.
காதலுக்கு என்னுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கொஞ்ச நாட்கள் கழித்து திருமணம் செய்துகொள்வோம் என்றபோது அவள், உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள்.
கடந்த மாதம் 31–ந் தேதி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எங்கள் திருமணம் நடந்தது. எனது தரப்பில் யாரும் திருமணத்துக்கு வரவில்லை. திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக தனிக்குடித்தனம் நடத்தி வந்தேன். வேலம்மாளும் தொடர்ந்து நர்சிங் படித்துவந்தாள்.
10 நாட்களுக்கு முன்புதான் எனக்கு பாளையங்கோட்டை ஜெயிலுக்கு பணிமாறுதல் கிடைத்தது. நான் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், வேலம்மாள் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பாள். நானும் யார் என்று கேட்டால் தோழி என்று கூறுவாள். அவள் என்கூட பேசிய நேரத்தைவிட, செல்போனில் பேசிக்கொண்டு இருந்த நேரம்தான் அதிகம்.
இதுபற்றி கேட்டால் என்னுடன் தகராறு செய்வாள். இதனால் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்தேன்.
ஆனால் அவள் செல்போனில் பேசுவதை குறைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் கோவிலுக்கு போகலாம் என்று அழைத்துச்சென்று கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.