332 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் : இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

595

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணி மருத்துவரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாஸர். சுமார் 332 பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக லாரி நாஸர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் Rachel Denhollander என்ற பெண் முதன்முறையாக தைரியமாக வெளிவந்து லாரி நாஸருக்கு எதிராக குற்றம் சாட்டியதையடுத்து, 156 பெண்கள் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்க முன்வந்தனர்.

சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டு 60 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவர் விடுவிக்கப்பட்டால், பாலியல் துன்புறுத்தலுக்காக 175 ஆண்டுகள் சிறையிலடைக்கப்படுவார்.

மருத்துவரால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் பலர், பல முறை பல்கலைக்கழக அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பின்னர் Rachel Denhollanderஐத் தொடர்ந்து பல பெண்கள் வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்ததையடுத்து பிரச்சினை பூதாகரமாகியது.

இப்போதும்கூட பல பெண்கள் லாரி நாஸர் மீது இருப்பதை விட பல்கலைக்கழகத்தின்மீது அதிக கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் புகாரளித்தபோதே பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு மோசமான நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நடந்த துர்ச்சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மிச்சிகன் பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

இந்த தொகையில் 425 மில்லியன் டொலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மீதமுள்ள 75 மில்லியன் டொலர்கள் தொகை எதிர் காலத்தில் ஏதேனும் புகார்கள் வந்தால் அந்த சமயத்தில் இழப்பீடு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது.