4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொலை செய்ததாக உறவுக்கார பெண் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

504

கடலூர்…..

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே 4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொடூரமாக கொலை செய்ததாக உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் புதன் கிழமை மதியம் 3 மணி அளவில் மாயமானதாக கூறப்படுகிறது.

காணாமல் போன சிறுவனை உறவினர்கள் ஊர் முழுதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து சிறுவனின் தந்தை முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர் .

இதற்கிடையே சிறுவன் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர் போலீசார் சமாதானப்படுத்தியதால் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை சீனிவாசன் என்பவரது முந்திரிக்காட்டில் சிறுவன் மர்மமான முறையில் இறந்துகிடந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவனது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் வாய் மற்றும் முகத்தில் ரத்தகாயம் இருந்ததால் யாரோ அவனை கடத்திச்சென்று அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான முருகவேல் என்பவரின் மகள் 28 வயதான ரஞ்சிதா என்பவர் சிறுவனை அழைத்துச் சென்றதை சிலர் பார்த்ததாக தெரிவித்ததால், ரஞ்சிதாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர் முத்தாண்டிகுப்பம் போலீசார்.

ரஞ்சிதாவிடம் பெண் காவல் ஆய்வாளர் வள்ளி நடத்திய விசாரணையில் சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

ரஞ்சிதாவும் சிறுவனும் உறவினராக இருந்தாலும் இருவரது குடும்பத்திற்கும் சொத்து தகராறு காரணமாக பேசாமல் இருந்துள்ளனர்.

சம்பவத்தன்று கையில் கொய்யா பழத்துடன் முந்திரிக்காட்டுக்கு சென்ற ரஞ்சிதாவை சிறுவன் பின் தொடர்ந்ததாகவும்,

தன் பின்னால் வரும் சிறுவனை தடுக்கும் நோக்கில் அவனை தள்ளிவிட்டதோடு பழைய குடும்ப பகையை மனதில் வைத்து அவனது முகத்தை தரையில் தேய்த்து கொடூரமாக கொலை செய்ததாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

இதையடுத்து சிறு பிள்ளை என்றும் பாராமல் 4 வயது சிறுவனை சீண்டித்தீர்த்துக் கட்டிய ரஞ்சிதாவை கொலை வழக்கில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெருவில் விளையாடும் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களையும் இனி மிகுந்த அக்கறையுடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்கள் குழந்தைகள் யார் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணிக்க தாவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த கொடூர சம்பவமும் ஒரு சாட்சி..!