நாமக்கல்..
நாமக்கல் அருகே உள்ள விவசாய கிணற்றில் சாக்குமூட்டையில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் சடலத்தை மீட்டு,
கொலை செய்யப்பட்ட பெண் யார் என விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண், கொசவம்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த 40 வயதான லலிதா என்பது இரு தினங்களுக்கு முன்பு தெரியவந்தது.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான 26 வயதான சுரேந்தர் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் லலிதாவை அடித்துக் கொலை செய்ததாக சுரேந்தர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து, லலிதாவின் 4 பவுன் நகையை மீட்டனர். தொடர்ந்து சுரேந்தரிடம் நடத்திய விசாரணையில், லலிதாவின் கணவர் 20 ஆண்டுக்கு முன்பே இறந்துவிட்டார்.
இந்நிலையில்,சுரேந்தரின் பெற்றோர் நடத்தி வந்த மளிகைக்கடை அருகில் லலிதா கடலை வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது, லலிதாவுக்கு சுரேந்தர் சிறுசிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில மாதமாக இருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதெரிந்து பெற்றோர் சுரேந்தருக்கு வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இதனால் சுரேந்தர், லலிதாவை சந்திக்கவில்லை. ஆத்திரமடைந்த, லலிதா அவரிடம் வேறு யாரையும் நீ திருமணம் செய்யகூடாது… நாம் சென்னைக்கு சென்று பிழைத்துக்கொள்ளலாம் என அழைத்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி லலிதாவை ஒரு காரில் அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்ற சுரேந்தர் அவரை அடித்து கொலை செய்து, சாக்கு மூட்டையில் திணித்து கிணற்றில் வீசியுள்ளார்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சுரேந்தர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.