பூந்தமல்லி…
பூந்தமல்லி அருகே குன்றத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (50). இவர் தனது கணவரை பிரிந்து 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணம்மாள் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இந்த மர்ம கொலை சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், கண்ணம்மாளுக்கும், அவர் வேலைபார்க்கும் அதே நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் ராஜா (31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசத்தில் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணம்மாள் வீட்டுக்கு வந்த ராஜா, அவரை தன்னுடன் உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜாவை கண்ணம்மாள் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, கண்ணம்மாளை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இதை தொடர்ந்து ராஜாவை போலீசார் கைது செய்தனர்.