சீனாவில் ஓவியக்கலை மாணவி ஒருவர், 500 வண்ணத்துப்பூச்சிகளைக் கொண்டு உருவாக்கிய ஓவியம் ஒன்று பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சீனாவின் க்வான்ஸொவ் பல்கலைக்கழகத்தில், 4ஆம் ஆண்டு ஓவியக்கலை பயின்று வரும் மாணவி லி ஸெங். இவருக்கு யாரும் இதுவரை பயன்படுத்தாத பொருளை வைத்து ஓவியம் உருவாக்க வேண்டும் என்ற Project கொடுக்கப்பட்டது.
அதன்படி, லி ஸெங் யாரும் பயன்படுத்தாத பொருளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், ஒருவழியாக வண்ணத்துப் பூச்சிகளை வைத்து புகழ்பெற்ற ஓவியர் வான்காவின் ஓவியத்தை வரைய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவருக்கு 500 வண்ணத்துப்பூச்சிகள் தேவைப்பட்டுள்ளது. அதற்கான வேட்டையில் இறங்கிய லி ஸெங், வண்ணத்துப்பூச்சிகளை சேகரித்து அவற்றின் இறக்கைகளை வைத்து ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த ஓவியத்திற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், வண்ணத்துப்பூச்சிகளை கொன்றதற்காக பலர் அவர் மேல் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து லி ஸெங் கூறுகையில், ‘ஆரம்பத்தில் வண்ணத்துப்பூச்சிகளை கொல்கிறோமே என்று வருத்தமாக இருந்தது. சில நாட்களில் இறந்துபோகும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மறு வாழ்வு அளிக்கிறோம் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.
வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து, பதப்படுத்தி, ஓவியத்தில் கொண்டு வருவது நான் நினைத்ததைப் போல் அவ்வளவு எளிதாக இல்லை. என்னுடைய இந்த Project எல்லோரையும் கவர்ந்து விடும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால், பேராசிரியர்கள் உட்பட பலரும் என்னைக் கண்டித்துவிட்டனர். இந்த ஓவியம் உருவாக்கியதில் இப்போதுவரை எனக்கு குற்றவுணர்வு ஏற்படவில்லை.
இந்த ஓவியத்தின் அழகையும், உழைப்பையும் மதிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பாராட்டு எனக்கு ஆறுதலைத் தருகிறது’ என தெரிவித்துள்ளார்.