56 உயிர்களை காவு வாங்கிய குண்டுவெப்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

253

குண்டுவெப்பு…

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி சனிக்கிழமை குஜராத்தின் மிக முக்கிய நகரமான அகமதாபாத் தனது இயல்பு வாழ்க்கையின் அமைதியோடு நகர்ந்து கொண்டிருந்தது. பரபரப்பான மாலை ஆறு மணி 35 நிமிடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நகரப் பேருந்து திடீரென வெடித்துச் சிதறியது. என்ன நடந்தது என்றே தெரியாமல் மக்கள் சிதறி ஓடினர்.

எங்கு பார்த்தாலும் மரண ஓலம், ரத்தம் வழியும் முகங்களோடு ஆங்காங்கே சிதறிக்கிடந்தார்கள் சிலர், சில நொடிகளில் அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பயங்கர வெடிச்சத்தம், இன்னும் மற்றொரு அரசுப் பேருந்து வெடித்துச் சிதறியது. இப்படி 70 நிமிட இடைவெளியில் 21 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் 56 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 240க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அகமதாபாத் நகரம் அச்சத்திலும், ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சியிலும் உறைந்தது. இந்த படுபாதக செயலுக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது குறித்து அகமதாபாத் போலீசார் 20 வழக்குகள் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

குண்டுகள் ரத்த கரை காய்வதற்குள் அடுத்த 2 நாட்களில் சூரத் நகரத்தின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தமாக 35 வழக்குகள் மீது விசாரணையை தொடங்கியது அகமதாபாத் காவல்துறை. 2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கோத்ரா கலவரத்துக்கு பழிவாங்கும் வகையில் ‘இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு’ சதித்திட்டம் தீட்டி குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 77 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கு தொடர்பாக ஆயிரத்து100 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 26 பேர் முக்கிய சாட்சிகளாக எடுத்து கொள்ளப்பட்டனர், கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் சிறப்பு நீதிபதி ஏ.ஆர்.பட்டீல் கடந்த 8ஆம் தீர்ப்பு வழங்கினார். அதில் உரிய சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லாத காரணத்தினால் 28 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், மற்ற 49 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளித்தார்.

மேலும், இவர்களுக்கான தண்டனை வாதங்கள் கடந்த 15 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்துள்ளார்.

அதில், 38 பேருக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக தண்டனை விவரம் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.