65 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த புதிய கார்: அரங்கேறிய சோகம்!!

304

பொள்ளாச்சி..

பொள்ளாச்சி அருகே உள்ள A.நாகூரை சேர்ந்த 65 வயதான விவசாயி ஈஸ்வரன் என்பவர் தென்னை மரங்களுடன் கூடிய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். ஈஸ்வரனின் மகள் தனது தந்தை எளிதாக கார் ஓட்ட வேண்டும் என்பதற்காக ஆட்டோமேட்டிக் கியருடன் கூடிய புத்தம் புதிய எக்ஸ்.எல்.6 கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

புதிதாக வாங்கிய அந்த காரை தனது வீட்டின் முன்பக்கம் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் காருக்குள் அமர்ந்து அவரது பேரன் கோகுல் கிருஷ்ணா விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. பொள்ளாச்சி செல்வதற்காக காரில் புறப்பட்ட ஈஸ்வரன், காரை ஸ்டார்ட் செய்துள்ளார். வழக்கமாக மேனுவல் கியர் உள்ள வாகனங்களை ஓட்டி பழகிய ஈஸ்வரனுக்கு, ஆட்டோமெட்டிக் காரின் கியர் சிஸ்டத்தை அறிந்து கொள்ள இயலவில்லை.

வழக்கம் போல கியரை மேல் பக்கம் நகர்த்தியுள்ளார் , ஆட்டோமெடிக் கியர் சிஸ்டத்தில் நியூட்டரலில் இருந்து மேல்பக்கம் கியரை நகர்த்தினால் கார் ரிவர்ஸ் ஆகும், இந்த விபரீதத்தை உணராமல் கவனக்குறைவால் காரை இயக்கியதால், கண்ணிமைக்கும் நேரத்தில் கார் பின்னோக்கி நகர்ந்து 65 அடி ஆழ தண்ணீர் இல்லா தரைமட்ட கிணற்றில் விழுந்து நொறுங்கியது.

இதில் காரை ஓட்டிய ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் காயங்களுடன் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த கிணற்றுக்குள் விழுந்த காரை கிரேன் உதவியுடன் கயிறு கட்டி மேலே தூக்கினர்

இச்சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர் . வழக்கமான கார்களில் முதல் கியரை இடப்பக்கம் நகர்த்தி மேல் நோக்கி தள்ளினால் கார் முன்பக்கம் செல்லும், ரிவர்ஸ் கியரை வலப்பக்கம் நகர்த்தி கீழ் நோக்கி இழுத்தால் கார் பின் பக்கம் செல்லும்.

ஆனால் ஆட்டோ மெட்டிக் காரில் பார்க்கிங்கிற்கு p என்றும், ரிவர்ஸ் எடுப்பதற்கு R என்றும் நியூட்ரல் வசதிக்கு N என்றும் வேகமாக செல்லும் டிரைவிங் மோடு D என்றும் , மெதுவாக செல்லும் இடத்தில் 2 என்றும் , மலைபகுதியில் வாகனத்தை இயக்குவதற்கு L என்றும் கியர் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதில் பார்க்கிங்கில் இருந்த காரை நியூட்ரலுக்கு கொண்டுவந்த ஈஸ்வரன், இது ஆட்டோமெடிக் கார் என்பதை மறந்து சாதாரண காரின் முதல் கியரை போடுவது போல, மேல் பக்கம் நகர்த்தி யதால் ரிவர்ஸ் கியர் இயக்கப்பட்டு, அந்த கார் பின் பக்கம் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய கவனக்குறைவு ஒரு உயிர் பலியாக காரணமாகி விட்டதாக போலீசார் சுட்டிகாட்டினர். ஆசை ஆசையாய் மகள் தன் தந்தைக்கு வாங்கிக் கொடுத்த காரே அவரது உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது சோகத்திலும் சோகம்.