திருவண்ணாமலை…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசாலை பகுதியில் செவன் ஸ்டார் பிரியாணி ஓட்டல் உள்ளது. இதனை காதர் பாஷா என்பவர் நடத்திவருகின்றார்.
இந்த உணவகத்தில் வியாழக்கிழமை இரவு தந்தூரி பிரியாணி சாப்பிட்ட பின் ஆரணி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 7 பேருக்கு வெள்ளிக்கிழமை காலை, தீராத வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறி ஆரணி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அதே ஓட்டலில் சிக்கன் தந்தூரி பிரியாணி சாப்பிட்டதாக கூறி ஆரணி லட்சுமிநகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் நான்கு பேர் மாலை 3 மணியளவில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களில் பத்து வயதுடைய சிறுமி லோக்ஷனா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதே ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டதால் பாதிப்புக்குள்ளான கூறப்படும் மேலும் 11 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், நிலமையின் விபரீதம் உணர்ந்து ஆரணி கோட்டாச்சியர் கவிதா, மற்றும் போலீஸ் டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்துவிட்டு, செவன் ஸ்டார் பிரியாணி ஓட்டலில் உணவு பொருள் பாதுகாப்பு குழுவினருடன் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
பிரியாணி சமைக்க கெட்டுபோன கோழி இறைச்சி பயன்படுத்தப்பட்டதா? அல்லது பிரியாணியில் வேறு ஏதும் கலக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்த அதிகாரிகள், ஆய்வுக்காக இறைச்சி உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துச்சென்றதோடு அந்த கடையையும் இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சாப்பிட்டதற்கு ஆதாரமான சிசிடிவி காட்சிகளும் அங்கிருந்து சேகரிக்கப்பட்டது.
பலரது விருப்ப உணவான பிரியாணியை சாப்பிட்ட பின் சிறுமி பலியானதோடு இதுவரை 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அசைவ பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அதே நேரத்தில் பெரும்பாலான ஓட்டல்களில் சமைக்கப்படும் அசைவ உணவுகளின் தரத்தை ஆவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டிய உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தவறுவதே இத்தகைய விபரீதம் நிகழ வழி வகுத்து விடுவதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.