கேரளாவில்..
இன்றைய காலகட்டத்தில், வயது என்பது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் தங்களுக்கு விருப்பமான துறையில் அபராமான சாதனைகள் பலவற்றை செய்து தான் வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஐந்து வயது சிறுவனின் கால்பந்து திறமை தொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி ஏராளமானோரை ஆச்சரியப்பட வைத்திருந்தது. அந்த வகையில், தற்போது 71 வயதாகும் பெண்மணி ஒருவர் இந்த வயதிலும் செய்துள்ள விஷயம் ஒன்று, இணையத்தில் பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.
கேரள மாநிலம் தோப்பும்படி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி அம்மா. இவர் மணியம்மா என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு தற்போது 71 வயதாகிறது. அப்படி இருக்கையில் ஜேசிபி, கிரேன், பஸ், லாரி, ஆட்டோ ரிக்ஷா உள்பட 11 கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற்றிருக்கிறார் ராதாமணி அம்மா.
முன்னதாக, தனது முப்பதாவது வயதில் தான் வாகனங்களை ஓட்டவே ராதாமணி கற்றுக் கொண்டுள்ளார். அதுவும் மறைந்த அவரது கணவர் லாலின் உந்துதல் பெயரில் வாகனம் ஓட்ட கற்றுக் கொண்ட ராதாமணி அம்மா, ஒரு கட்டத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் சிறப்பாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இதன் பின்னர் பல்வேறு வகையான வாகனங்களை ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விருப்பப்பட்ட ராதாமணி, தொடர்ந்து ஏராளமான கனரக வாகனங்களை ஓட்ட ஆரம்பித்துள்ளார்.
கடந்த 1978 ஆம் ஆண்டில் டிரைவிங் ஸ்கூல் ஒன்றை கணவர் லால் ஆரம்பித்தது முதல் வாகனங்களை ஓட்டி வரும் ராதாமணி, 1988 ஆம் ஆண்டு பஸ் மற்றும் டிரக் வாகனங்களுக்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறார். மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு, கணவர் மறைந்த பிறகு தனது பிள்ளைகளுடன் சேர்ந்து டிரைவிங் ஸ்கூலையும் நடத்தி வருகிறார் ராதாமணி.
11 கனரக வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் முதல் கேரள பெண் என்ற பெருமை பெற்றிருக்கும் ராதாமணி அம்மா, தற்போது பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ புரோகிராம் படித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
வயது என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தடை இல்லை என்பதை ராதாமணி அம்மா உணர்த்தும் வகையில் இருக்கும் நிலையில் பலரும் இவரை பாராட்டி கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.