இந்தியாவில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 73 வயதில் முதியவர் ஒருவர் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் மாநிலம், சாம்பாய் மாவட்டத்தில் உள்ள நியூ கிரூயாய்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்ரிங்தாரா. 73 வயதாகும் இவர், கிறிஸ்துவ தேவாலயத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அவரது கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சேர்ந்துள்ளார் அவர். அடுத்த கல்வியண்டு முதல் பள்ளிக்கு சென்று படிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லால்ரிங்தாரா, இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தனது தந்தையை இழந்தார். அதனைத் தொடர்ந்து, அவரது தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், உறவினர் ஒருவரின் வளர்ப்பில் லால்ரிங்தாரா வளர்ந்துள்ளார்.
ஆனால், அவரால் தனது படிப்பைத் தொடர முடியவில்லை. இந்நிலையில், தனக்கு கல்வி மீது இருந்த ஆர்வத்தால் தற்போது பள்ளியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மிசோ மொழியை பேசவும், எழுதவும் செய்யும் லால்ரிங்தாரா, ஆங்கிலம் படிக்க சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக, பள்ளி சென்று ஆங்கிலம் கற்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
60 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கு சென்று படிக்க உள்ள லால்ரிங்தாராவின் கல்வி ஆர்வம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.