அகதியாக வந்தாலும் அன்பைக் கொண்டுவரத் தவறவில்லை: ஒரு தியாகத் தாயின் கதை!!

614

உலகம் அன்னையர் தினத்தைக் கொண்டாடப்பட்ட நிலையில் தனது அன்னை தனக்காக செய்த தியாகங்களை நினைவுகூறுகிறார் கனடாவுக்கு ஒரு அகதியாக சென்று இன்று ஒரு மஸாஜ் தெரபிஸ்டாக பணிபுரியும் Abby Alovera.

1994ஆம் ஆண்டு கனடாவுக்கு தனது மகளுடன் புலம்பெயர்ந்து வந்தவர் Glenda Conde.பிலிப்பைன்சிலிருந்து அவரது தந்தை வெறும் 100 டொலர்களை மட்டும் கையில் கொடுத்து அவரை அனுப்பி விட்டார்.

அவரது தோழி ஒருவர் 4 டொலர்களைக் கொடுக்க மொத்தம் 104 டொலர்களுடனும் கையில் குழந்தையுடனும் கனடா வந்திறங்கினார் Glenda Conde.கனடாவில் யாரையும் தெரியாது. ஒரு பிரச்சினை என்றால் உதவி கேட்க உறவினர்கள் யாரும் கிடையாது. “உண்மையில் நான் மிகவும் பயந்திருந்தேன், சொல்லப்போனால் நாங்கள் ஒன்றுமில்லாமையிலிருந்து தொடங்கினோம்” என்கிறார் அவர்.

ஒன்டாரியோவில் குடியேறினர் இருவரும். அப்போது Abbyக்கு ஆறு வயது. எனக்காக அம்மா என்ன செய்தார்கள் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை.

இப்போது புரிகிறது, அம்மா தனது வாழ்க்கையையே எனக்காக தியாகம் செய்திருக்கிறார் என்கிறார் Abby.
தனது மகளை வளர்ப்பதற்காக வீடுகளை சுத்தம் செய்யவும், காபி ஷாப்பில் வேலை செய்யவும் தயங்கவில்லை Glenda.

என்னை பொருத்தவரையில் எனக்கு வீடோ பணமோ பெரிதில்லை, எல்லம் என் மகள்தான், அவள்தான் ஆண்டவன் எனக்கு அளித்த ஆசீர்வாதம் என்கிறார் Glenda.

தாய் இப்படிச் சொல்ல மகளோ, என்ன கேட்டாலும் கிடைக்கும், கிடைக்காது என்று எதுமே இல்லை என்னுமளவிற்கு தன்னை அம்மா வளர்த்ததாகக் கூறுகிறார்.அம்மா, என்னை கனடாவிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி என்று கூறும் Abbyயால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

எனக்கு எல்லாம் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் எனக்காக அம்மா எல்லாவற்றையும் தியாகம் செய்ததுதான் என்று கண்ணீர் மல்க கூறுகிறார் அவர்.

Glendaவோ கஷ்டப்பட்டால்தான் சில நல்ல விடயங்கள் கிடக்கும், என் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம் என்கிறார்.தாயும் மகளும் ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளும் வீடியோவைக் காணும்போது நமக்கும் கண்ணீர் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.