தமிழகத்தில்..
தமிழகத்தில் அக்காவின் திருமணத்திற்காக சிறுவன் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விளைந்து களைத்த நிலங்களை வளமாக்க,
புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து செம்மறி ஆடுகள் வரவழைக்கப்பட்டு விளை நிலங்களில் நிறுத்தப்பட்டு, உர தேவைக்காக விவசாயிகள் இப்படி பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் கொரடாச்சேரி அருகே காவனூர் பகுதியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஒருகுழுவினர் செம்மறி ஆடுகளுடன் வந்து விவசாய நிலத்தில் ஆடுகளை களமிறக்கி அருகில் தங்கியுள்ளனர்.
அப்போது இந்த குழுவில் சிறுவர்கள் சிலர் ஆடு மேய்க்க கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டுள்ளதாக திருவாரூர் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பின் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வீரபாண்டியன் மகன் விஸ்வநாதன் கொத்தடிமையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், வீரபாண்டியன் மூத்த மகள் திருமண செலவிற்காக, விற்கப்பட்டது தெரியவந்தது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் 100,000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதால், கடந்த 7 மாதமாக விஸ்வநாதன் கொத்தடிமையாக இருந்துள்ளான்.
அதன் பின் சிறுவன் விஸ்வநாதன் அங்கிருந்து மீட்கப்பட்டு மன்னார்குடி ஆர்டிஓ அழகிரிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட பின், ஆர்டிஓ கொத்தடிமையாக இருக்க வழங்கப்பட்ட லட்ச ரூபாய் கடனையும் ரத்து செய்து உத்தரவிட்டதோடு,
விஸ்வநாதனை கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கும் படி உத்தரவிட்டதால், சிறுவர் பாதுகாப்பு மையத்தில் குழந்தைகள் நல அமைப்பினர் சிறுவனை தங்க வைத்தனர்.