அடிக்கடி வெவ்வேறு நிறங்களில் மாறும் பாறை!!

857

வடக்கு அவுஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) என்ற ஊரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் வெவ்வேறு நிறங்களில் மாறும் பாறை ஒன்று அமைந்துள்ளது.ஒரே பாறையால் ஆன இந்தக் குன்று உலகிலேயே மிகப் பெரியது. சிவப்பு வண்ணத்தில் மட்டுமில்லாமல் அவ்வப்போது நிறம் மாறிக் காட்சி தருவது இதனுடைய வியப்பான ஒரு அம்சமாகும்.

இந்த பாறைக் குன்றின் இயற்கை நிறம் நீலம் கலந்த சாம்பல் நிறம் தான். ஆனால், வெயில் படும் போது அது சிவப்பு நிறத்தில் மாறி விடுகிறது.நண்பகலில் பழுப்பு நிறமாகவும், மாலைப் பொழுதில் நீலம் கலந்த சிவப்பு நிறமுள்ள பாறையாகவும் தோற்றமளிக்கும்.

இந்த பாறையில் உள்ள தனிமங்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் போது ஏற்படும் மாற்றத்தினாலே இப்பாறை வெவ்வேறு நிறங்களில் மாறி காட்சியளிக்கின்றது.இந்த அதிசயப் பாறையை நில அளவியலாளர் ‘வில்லியம் கோஸ்’ (Surveyor William Gosse) என்பவர் முதன் முதலில் 1873-ல் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

தெற்கு அவுஸ்திரேலியாவின் அப்போதைய தலைமைச் செயலரான ‘சர் ஹென்றி ஏயர்ஸ்’ (Sir Henry Ayers) என்பவர் பெயரை அந்த கற்பாறைக்குச் சூட்டினார்.இதன் காரணமாக ‘ஏயர்ஸ் பாறை’ (Ayers Rock) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இயற்கையின் அதிசயமாக விளங்கும் இந்த பாறை ‘யுனெஸ்கோ’ (UNESCO) அமைப்பால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.