அஜித்குமார்…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தேவாங்கு முதலியார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி செல்வி தாயார் லட்சுமி மற்றும் மகன் அஜித்குமார் உடன் வசித்து வருகிறார்.
தந்தை கூலி வேலை செய்து வரும் நிலையில் அஜித் குமார் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாக ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்து வந்த நிலையில் ஆறுமுகத்தின் வீட்டின் அருகில் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இடி விழுந்ததில் தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்து அருகிலிருந்த ஆறுமுகத்தின் வீட்டின் மீது விழுந்தது.
ஏற்கனவே மழையினால் ஊறியிருந்த ஆறுமுகத்தின் வீட்டின் மண்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் சுவர் ஓரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்த பாட்டி லட்சுமி மற்றும் பேரன் அஜித் குமார் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறுமுகமும் அவரது மனைவி லட்சுமியும் மற்றொரு அறையில் படுத்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அஜித்குமாருக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டின் சுவர் இடிந்து அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.