தெய்வவெனுசியா..
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வேல்முருகன். இவருக்கு மதிவதனா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.
இதில் 6 வயதான மூத்தமகள் தெய்வவெனுசியா கடந்த 21ந் தேதி காலை வீட்டின் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் நான்கு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த கோவிலுக்கு அண்மையில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பதால் தினமும் அங்கு விளக்கேற்றி வைத்துள்ளனர். இந்த நிலையில் தெய்வவெனுசியா வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு,
திருநீறு பூசுவதற்காக கோயில் உள்ளே சென்றபோது, அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீ சிறுமியின் ஆடையின் மீது பிடிக்க தொடங்கி மள மளவென உடல் முழுவதும் தீ பரவி உள்ளது.
அங்கிருந்து உடல் முழுவதும் எரிந்த நெருப்போடு அலறியடித்து வீட்டிற்கு சிறுமி ஓடிச் சென்றுள்ளார்.
சிறுமி அணிந்திருந்த ‘கவுன்’, பாலியஸ்டர் துணியிலானது என்பதாலும் இறுக்கமான எளாஸ்டிக் உடன் காணப்பட்ட அந்த ஆடை தீயில் உருகி உடலில் ஒட்டிக் கொண்டதால் தீயை அணைக்க இயலாததால் தாயார் மதிவதனா என்ன செய்வது என்று தெரியாமல் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தெய்வ வெனுசியாவை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிறுமி பரிதாமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்கும் போது மிகுந்த கவனத்துடன் கண்காணிக்க வேண்டியது அவசியம்.
எளிதில் தீப்பற்றக்கூடிய பாலியஸ்டர் துணிகளை அணிவதை தவிர்த்திருக்கலாம் என்றும் மேலும் உடலில் தீப்பிடித்தால் தண்ணீரால் அணைப்பது மிகவும் ஆபத்தாக மாற்றிவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.