இந்தியாவில் சமையல் செய்வது யார் என்ற தகராறில், தம்பியே தனது அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலம் குருக்ராம் அருகே சரஸ்வதி என்க்ளேவ் பகுதியில் ஜெய்சிங்(29), பல்வந்த் சிங் ஆகிய அண்ணன், தம்பி இருவர் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், பல்வந்த் சிங்கை சமையல் செய்யுமாறு ஜெய்சிங் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பல்வந்த் சிங் தனது அண்ணனை கொலை செய்துள்ளார்.இச்சம்பவம் குறித்து அவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் அளித்த புகாரின் பேரில், பல்வந்த் சிங் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக பல்வந்த் சிங் தனது வாக்குமூலத்தில், ‘எனது சகோதரர் ஜெய்சிங், நேரத்துடன் வீட்டிற்கு வருவதில்லை. எனக்கு மறுநாள் வேலைக்கு விரைந்து செல்ல வேண்டும் என்பதால் இது எனக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது.
ஆனால், அடிக்கடி தாமதமாக வீட்டுக்கு வருவதோடு அச்சமயம் சமைக்கச் சொல்லி என்னை வற்புறுத்துவார்.மூன்று நாட்களுக்கு முன்னர் நாங்கள் இந்த விவகாரத்தில் சண்டையிட்டுள்ளோம். ‘நீயே சமையல் செய்துகொள்’ என்று நான் கூறிவிட்டேன்.
ஆனால், நான் அந்நேரத்தில் எழுந்து சமைக்க வேண்டும் என என்னை வற்புறுத்துவார். சம்பவத்தன்றும் அவர் வழக்கம்போல தாமதமாக வீட்டுக்கு வந்தார்.என்னை சமைக்கும்படி வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரைக் கொன்றேன்’ என தெரிவித்துள்ளார்.