சேலம்….
சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மரகதம் என்ற மனைவியும் 5 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மூட்டை தூக்கும் தொழிலாளியான கோபால் கஞ்சா வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரோடு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் கோபாலுக்கு மட்டும் ஜாமின் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி ஜாமின் மறுப்பதாககூறி கோபாலின் மனைவி இன்று 6 குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தன் கணவரை ஜாமினில் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்றும் பலமுறை முயற்சித்தும் அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை என்றும் ஆனால், அவருடன் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
தனி ஒரு ஆளாக ஆறு குழந்தைகளையும் பராமரிக்க முடியவில்லை. மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். என் கணவரை சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆறு குழந்தையுடன் தாய் சிறையில் இருக்கும் கணவனை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.