ஆளில்லா விமானத்தின் மூலம் நாயை காப்பாற்றிய இளைஞர்! குவியும் பாராட்டுகள்!

536

இந்தியா, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகர சாலையின் நடுவே உள்ள கால்வாயில் விழுந்து தவித்த நாய்க் குட்டியை, ஆளில்லா விமானத்தின் உதவியுடன் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இம்மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள ஒரு சாலையின் நடுவே, இருபக்க கொங்கிரீட் சுவருடன், 20 அடி ஆழமுள்ள கால்வாய் உள்ளது. அதில் கழிவு நீரும், குப்பை, கூளங்களும் அதிகமாக உள்ளன.

இந்நிலையில், அந்த கால்வாயில் குட்டி நாய் ஒன்று தவறி விழுந்து, வெளியேற முடியாமல் தவித்தது. இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர், மிலிந்த் ராஜ், 27, நாய்க்குட்டியை காப்பாற்ற நினைத்தார்.

அதற்கு, தன் பரிசோதனை கூடத்தில் உருவாக்கிய, ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்த எண்ணினார்.உடனே செயலில் இறங்கிய மிலிந்த், ஆளில்லா விமானத்துடன், செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் இயந்திர கையை பொருத்தினார்.

பின், ரிமோட் கட்டுப்பாடு உதவியுடன் ஆளில்லா விமானத்தை இயக்கிய மிலிந்த், அதனுடன் பொருத்தப்பட்ட இயந்திர கையால், நாயை பாதுகாப்புடன் மேலே துாக்கச் செய்தார்.

சிறிது நேரத்தில் அந்த குட்டி நாய் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது.

கால்வாய் நீரில் தத்தளித்த போது விழுங்கியிருந்த சில பிளாஸ்டிக் கழிவுகளையும், சாக்கடை நீரையும் வாந்தி எடுத்த பின், அந்த நாய் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. அதை பார்த்த ஏராளமானோர், மிலிந்துக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.இந்தியாவில், ஆளில்லா விமானம் மூலம், விலங்கு ஒன்று காப்பாற்றப்பட்டிருப்பது, இதுவே முதல் முறை.