இந்தியாவில் அசுர வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை நோய் : 3 வாரத்தில் 31,000 பேர் பாதிப்பு, 2100 பேர் பலி!!

336

பூஞ்சை நோய்..

இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 3 வாரத்தில் கருப்பு பூஞ்சையால் 31,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,100 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பலவீனமானவர்கள் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) நோய் பாதித்து வருகிறது.

இந்த நோய் பாதிப்பால் பலர் தங்கள் கண் பார்வையை இழக்கின்றனர். உயிரையும் பறிக்கும் உயிர்க்கொல்லியாகவும் இந்நோய் இருந்து வருகிறது. இதனால், கருப்பு பூஞ்சையை கொள்ளை நோயாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சையின் பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 3 வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 31,216 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,109 பேர் இறந்துள்ளனர். 150% நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 7,057 பேர் பாதிக்கப்பட்டு 609 பேர் இறந்துள்ளனர். கடந்த மே 25-ஆம் திகதி புள்ளி விவரங்களின்படி, மகாராஷ்டிராவில் 2,770 பேர், குஜராத்தில் 2,859 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது இதர மாநிலங்களிலும் மளமளவென அதிகரித்து வருகிறது.

இந்நோயின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்பியோடெரிசின்-பி மருந்துக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவுவதே பலி எண்ணிக்கை உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தற்போது, மாநிலங்களின் பாதிப்பு அடிப்படையில் ஆம்பியோடெரிசி- பி மருந்தை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு தரும் மருந்து போதிய அளவுக்கு இல்லை எனவும், கூடுதல் மருந்து தர வேண்டும் எனவும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.