இந்தியா…………..
வடக்கு இந்தியாவின் இரண்டு எல்லை மாநிலங்களில் கங்கை ஆற்றின் கரையில் இருந்து டஜன் கணக்கான உடல்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலங்கள் கோவிட் -19 தொற்று நோயாளர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.
நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் வட இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் 100 சடலங்கள் மிதந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பீகார் மாநிலத்தில், சவுசா கிராமத்தில் இதேபோன்று திங்களன்று ஆற்றில் இருந்து 40 க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த உடல்கள் கோவிட் -19 நோயாளிகளுடையதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. சடலங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காசிப்பூரின் மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற தகனங்களில் எந்த கோவிட் நெறிமுறைகளும் இல்லாத நிலையில், சடலங்கள் தண்ணீரில் வீசப்பட்டால் இறந்தவர்களின் மூலம் தொற்று மேலும் பரவக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
கங்கை நதி உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்கள் வழியாகவும், இறுதியாக மேற்கு வங்காளத்திலும் பாய்கிறது, அங்கு அது வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.
இதேவேளை, இந்தியாவில் நேற்றைய தினம் 329,000 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியிந்த அதேவேளை, 24 மணி நேரத்தில் 3,876 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.