இளைஞனின் சேவை…
”மக்கள் துயரத்தில் தவிக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்காக டாக்டருக்கு படித்த நானே களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்… அப்புறம் நான் படித்த படிப்பிற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.”
கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக லாக்டெளன் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில், பட்டுக்கோட்டை அருகே இளம் டாக்டர் ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று இலவச சிகிச்சையளித்து வந்துள்ளார். மனித நேயம் மிக்க அவரின் செயலை, பாராட்டி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த சேக் அப்துல் காதர் என்பவர், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
இவரது மகன் ஜியாவூர் ரஹ்மான் ( வயது 25) கடந்த 2018-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். அதன் பிறகு, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.
மல்லிபட்டினத்தில் உள்ள தனது வீட்டிலேயே சிறிய அளவிலான கிளினிக் வைத்து நடத்திவருகிறார். தற்போது, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கவுன்சலிங்கிற்காகக் காத்திருக்கிறார்.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டன. இதையடுத்து, ஜியாவூர் ரஹ்மானும் தான் பணி புரிந்த தனியார் மருத்துவமமைக்கு பணிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
மேலும், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் இல்லாததால், தன் சொந்த ஊரான மல்லிபட்டினம் பகுதியைச் சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். ஒரு சிலர், டாக்டரான ஜியாவூர் ரஹ்மான் வீட்டிற்கே சென்று சிகிச்சி எடுத்துகொண்டனர்.
அத்துடன், தூரத்தில் உள்ள பலரால் வெளியே வரமுடியாத நிலையில் சிகிச்சை எடுக்க முடியாமல் இருந்துள்ளனர். இதை அறிந்த அவர், அவர்களின் வீடுகளுக்கே சென்று ஃபீஸ் எதுவும் வாங்காமல் இலவசமாக சிகிச்சை கொடுத்ததுடன், உரிய ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஜியாவூர் ரஹ்மானிடம் பேசினோம், “எங்க பகுதி மீனவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்தது. பெரும்பாலானவர்கள் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள்.
இந்த நிலையில், திடீரென லாக்டெளன் அறிவிக்கப்பட்டதால், வேலையிழந்த அவர்கள் வருமானமின்றித் தவித்தனர். அத்துடன், உடல் நிலை பாதிக்கப்பட்ட பலர், மருத்துவமனை இல்லாததாலும் கையில் பணம் இல்லாததாலும் சிகிச்சை எடுக்க முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில், என் வீட்டுக்கு வந்த பலருக்கு சிகிச்சை கொடுத்தேன். தூரத்தில் இருப்பவர்களால் வரமுடியவில்லை என்பதை அறிந்த நான் அவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சை கொடுத்தேன். இதற்காக, நான் ஃபீஸ் எதுவும் வாங்காமல் இலவசமாகவே செய்தேன்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர், வாதம் ஏற்பட்ட ஒருவர் எனப் பலருக்கு, தகுந்த ஆலோசனைகளை வழங்கி தைரியம்கொடுத்து சிகிச்சை அளித்ததுடன், எப்ப வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள் எனச் சொல்லி என் செல் நம்பரை கொடுத்துவிட்டு வந்தேன்.
இந்த இரண்டு மாத காலத்தில் சுமார் 400 பேருக்கு மேல் சிகிச்சை கொடுத்திருப்பேன். அப்போது, கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினேன். கஜா புயலின்போது கடுமையாக எங்கள் பகுதி பாதிக்கப்பட்டிருந்தபோதும் மக்களுக்காக களத்திலிருந்து இலவச சிகிச்சை கொடுத்தேன்.
நான் பள்ளியில் படிக்கும்போதே எங்க தாத்தா, `நீ டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும்’ என அடிக்கடி சொல்வார். அது என் மனத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டது. அத்துடன், மக்கள் துயரத்தில் தவிக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்காக டாக்டருக்கு படித்த நானே களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்.
அப்புறம் நான் படித்த படிப்பிற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்ததால், உடல்நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்தேன். இதற்காகப் பலரும் என்னைப் பாராட்டுகிறார்கள். `நான் என் கடமையை தான் செய்தேன்’ என்பது தான் எனது பதில்” என்றார்.