தமிழகத்தில் திருமணத்திற்கு மறுத்ததால் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயை அடித்துக் கொன்றதுடன், அப்பெண்ணுக்கு தாலிகட்டிய பின்னர் இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் காளிகாபுரம் கொண்டம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நிர்மலா(24). இவரது தந்தை சிவராமன்(55), தாய் சாமுண்டீஸ்வரி(45).
நிர்மலா திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் M.A படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்து படித்த அவர், வார விடுமுறையில் வீட்டிற்கு வந்து செல்வார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த லொறி ஓட்டுநரான அன்பழகன்(30) என்பவர், மாணவியை திருமணம் செய்ய நினைத்து தனது பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதன் பின், அவரது பெற்றோரும் நிர்மலாவின் பெற்றோரிடம் இதுதொடர்பாக பேசியபோது, மகள் படித்து முடித்ததும் இதுகுறித்து பேசுவதாக கூறிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாணவி நிர்மலாவின் படிப்பு செலவுக்கு அன்பழகன் பணம் கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்மலாவின் பெற்றோர் திடீரென அன்பழகனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன், அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். அதன் பின்னர், நிர்மலாவை குடும்பத்துடன் கொலை செய்ய திட்டமிட்ட அன்பழகன், சம்பவத்தன்று நள்ளிரவில் அரிவாளுடன் மாணவியின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அன்று மாணவிக்கு விடுமுறை தினம் என்பதால் அவர் வீட்டில் இருந்துள்ளார். முதலில் வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த மாணவியின் தந்தை சிவராமனை, சரமாரியாக வெட்டினார் அன்பழகன்.
பின் வீட்டிற்குள் சென்று மாணவி நிர்மலா மற்றும் அன்பழகனின் மனைவி சாமுண்டீஸ்வரியை அடித்தும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்தார். அதன்பின்னர் நிர்மலாவுக்கு தாலி கட்டியுள்ளார், தொடர்ந்து அவரும் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த பார்த்தனர். அப்போது, படுகாயமடைந்த சிவராமன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருந்தது தெரிந்ததால், ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிர்மலா, சாமுண்டீஸ்வரி மற்றும் அன்பழகன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.