இளவரசர் ஹரிக்கு திருமணம்!!

1013

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்தத் திருமணத்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்பதற்கான பணிகள் முடிந்து விட்டதாம். அரசியல்வாதிகளின் அழைப்புகளைப் பொறுத்தவரை, யாரை அழைக்க வேண்டும் என்பது பிரிட்டன் அரசோடு இணைந்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் கூறுகின்றன.

அதன்படி, மணம் முடிப்பவர்களுக்கு நேரடித் தொடர்பில் உள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ளப் போகிறார்கள். அவர்களுக்கு மட்டும் தான் அழைப்பு உள்ளதாம்.

ட்ரம்ப்புக்கு, மணமகன் -மணமகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாததால், அவருக்கு அழைப்பு கிடையாதாம்.

ஹரிக்கும் ஒபாமாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், ட்ரம்ப்பை அழைக்காமல் ஒபாமாவைத் திருமணத்துக்கு அழைப்பது அரச ரீதியான உறவுமுறைகளைப் பாதிக்கும் என்பதால், இருவருக்குமே அழைப்புகள் இல்லையாம்.

இந்தத் திருமணத்தில் பிரிட்டன் தலைமை அமைச்சர் தெரேசா மே கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த திருமண நிகழ்வின் சில முக்கிய விடயங்களை கென்சிங்டன் அரண்மனை (Kensington Palace) தனது அதிகாரபூர்வ கீச்சகத்தில் வெளியிட்டுள்ளது.