உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவரின் தந்தை எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!

412

உக்ரைன்….

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆய்வுகளுக்கு வழங்குவதாக நவீனின் தந்தை அறிவித்து உள்ளார்.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, உக்ரைன் நீட்டின் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதனை அடுத்து உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவி தாக்குதலை துவங்கின. இதுவரையில் ரஷ்ய படையினரின் தாக்குதல் காரணமாக சுமார் 600 உக்ரைன் மக்கள் உயிரிழந்து இருப்பதாகவும் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யா முன்னெடுத்த போர் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மக்கள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டு இருந்தது உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம். இதனிடையே, உக்ரைனின் கார்க்கிவ் நகரத்தில் மருத்துவம் பயின்று வந்த நவீன் என்னும் கர்நாடகாவை சேர்ந்த மாணவர் ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் மரணம் அடைந்தார்.

உணவு வாங்குவதற்காக தான் தங்கி இருந்த பதுங்கு குழியை விட்டு வெளியே சென்ற நவீன் ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரகம் நவீனின் தந்தையிடம் தெரிவித்திருந்தது.

நவீனின் தந்தைக்கு இந்திய பிரதமர் மோடி, கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போன் மூலமாகவும் நேரிலும் ஆறுதல் கூறினர். தன்னுடைய மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அப்போது நவீனின் தந்தை பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உயிரிழந்த நவீனின் உடல் வரும் திங்கட்கிழமை எமிரேட்ஸ் விமானம் மூலமாக பெங்களூரு விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார்.

இதனிடையே நவீனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்க இருப்பதாக நவீனின் தந்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,”என் மகன் உடல் பெங்களூருவுக்கு 21 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு வந்து சேரும். எங்கள் கிராமத்திற்கு காலை 9 மணிக்கு வந்தடையும்.

இறுதி சடங்குகள் நடைபெற்ற பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு அவனது உடல் வைக்கப்படும். அதற்குப் பிறகு, மாணவர்களின் ஆராய்ச்சிக்காக எஸ்.எஸ். மருத்துவமனைக்கு நவீனின் உடல் ஒப்படைக்கப்படும்” என்றார்.

தற்போதைய சூழ்நிலையில், தனது மகனின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவது ஆறுதல் அளிப்பதாக தெரிவித்த நவீனின் தந்தை இறுதிச் சடங்கில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.