உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் கைலாயம்? – மர்மங்களும் விளக்கங்களும்!!

2408

மும்மூர்த்திகளில் ப்ரம்ம தேவனின் இருப்பிடம் சத்யலோகம். விஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவனின் இருப்பிடம் கைலாயம் என்று கூறப்படுகிறது.

இந்த மூன்று இருப்பிடங்களில் சத்யலோகமும் வைகுண்டமும் சாதாரண மனிதர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை.ஆனால் நமது கண்களால் கண்டு தரிசனம் பெற்று முக்தி அடையும் வகையில் சிவனின் இருப்பிடமான கைலாயம் அமைந்துள்ளது.

உலகின் தலைசிறந்த சிகரங்களில் இமயமலையும் ஒன்று. உலகிலேயே உயர்ந்த சிகரமான இமயமலையில் வடக்கு பகுதியில் எம்பெருமான் சிவன் தன் மனைவி பார்வதியுடன் வசித்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.

இதில் கைலாயம் என்பது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத் நாட்டில் அமைய பெற்று இருக்கிறது.

சிந்து சட்லெஜ் பிரம்மபுத்திரா போன்ற பல நதிகள் இந்த கைலாயத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. இந்த கைலாயம் 6638 மீட்டர் உயரம் கொண்டுள்ளது.

இங்கு வரும் அனைவரும் வணங்கும் மானசரோவர் ஏரியை ப்ரம்ம தேவர் அவரது கைகளால் உருவாக்கியதாக கூறப்படுகிறது.உலகின் மிக உயரத்தில் இருக்கும் நன்னீர் ஏரி மானசரோவர் மட்டுமே. வேறு எங்கும் இது போன்ற ஏரிகள் இல்லை.

அழிந்து போனதாக சொல்லப்படும் அன்னப்பறவைகள் இன்னமும் இங்கு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் தெய்வங்களும் தேவர்களும் கின்னரர்களும் யக்ஷர்களும் வந்து நீராடும் இடமாக மானசரோவர் ஏரி விளங்குகிறது.

இதன் காரணமாகவே இங்கு நீராடியபின் கைலாயத்தை தரிசித்தால் முக்தி என்று மக்கள் நம்புகின்றனர்.

52கிமி சுற்றளவு கொண்ட கைலாய மலையை பரிக்கிரமமாக சுற்றி வரும் போது சுகு , ஜெய்தி எனும் இரு இடங்களில் கைலாய மலையின் பிம்பம் மானசரோவர் ஏரியில் விழுவதை பார்க்க முடியும்.

மிகவும் அரிய இந்த இடங்களை சிவனும் பார்வதியும் சேர்ந்து காட்சியளிக்கும் இடமாக மக்கள் வழிபடுகிறார்கள். கௌரிசங்கர் என்று இதற்கு பெயரும் வைத்திருக்கிறார்கள்.

தேவியின் 51 சக்தி பீடங்களில் மானசரோவர் தான் சதி தேவியின் வலது உள்ளங்கை விழுந்ததாக கூறப்படுகிறது.

மானஸரோவருக்கு வெகு அருகிலேயே ராட்சத தலம் என்று இன்னொரு ஏரியும் உண்டு. ராவணன் தவம் செய்த இந்த ஏரி உப்பு நீர் தன்மை கொண்டுள்ளது.

தெளிந்த பளிங்கு நீர் போல மானசரோவர் அமைதியாக இருக்கிறது. ராட்சத ஏரியோ ஆரவாரம் கொண்ட அலைகளை கொண்டு கொந்தளிப்பாகவே காட்சியளிக்கிறது.

அதே போல மானஸரோவரில் வலம் வரும் பறவைகள் எதுவும் ராட்சத தல ஏரிக்கு வருவதில்லை.

சிவபெருமானும் பார்வதி தேவியும் வாழும் இந்த கைலாயத்தில் மற்ற தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் கின்னரர்கள் ரிஷிகள் போன்றோரும் வாழ்கின்றனர். அவர்களுக்கான மாளிகைகள் குகைகள் ஆகியவை கைலாய மலையில்தான் ரகசியமாக இருக்கிறது.

சில சமயங்களில் இரவு நேரங்களில் மினுமினுக்கும் வகையில் இந்த இடங்கள் தங்களை வெளிக்காட்டி கொள்ளும் என்று கூறப்படுகிறது.

எட்டாயிரம் மீட்டருக்கும் மேல் உயரம் கொண்ட எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களால் கூட 7000 மீட்டர் உயரம் கொண்ட இந்த கைலாயத்தில் ஏற முடியவில்லை.

தப்பி தவறி யாரேனும் ஏறினாலும் அவர்கள் வழி தவறி விடுகின்றனர் என்கிற அமானுஷ்ய ரகசியங்கள் கொண்டது கைலாயமலை.

இந்துக்கள் மட்டுமல்லாமல் புத்தம் சமணம் பொம்பா போன்ற மற்ற மதத்தினரும் கைலாய மலையை கடவுளாக பார்க்கின்றனர்.

சாட்டிலைட் மூலம் கைலாயத்தை புகைப்படம் எடுத்த போது மிக பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்க ரூபமாக கைலாய மலை காட்சியளிப்பது கடவுளை நேசிக்காதவருக்கும் வியப்பை தருகிறது.

பிரபஞ்சத்தின் மைய பகுதியில் இருக்கும் கைலாயம் இந்துக்கள் நம்பிக்கை படி அவர்களுக்கு தந்தையாகிறது. மானசரோவர் ஏரி தாயாகிறது.

காலங்கள் ஸ்தம்பித்து போகும் குகைகள் கைலாயத்தின் அடியில் ஏராளமாக இருக்கிறது என்றும் இங்குதான் மகா அவதார் பாபாஜி மற்றும் எண்ணற்ற சித்தர்கள் வசிப்பதாகவும் நம்பப்படுகிறது.

இங்கு வருகை தரும் பக்கதர்களின் நகங்களும் முடிகளும் 12 மணி நேரத்தில் வளர்கின்றன என்கிறார்கள். இதன் மூலம் கைலாயத்தில் காலம் வேகமாக நகர்கிறது என்று அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

சூரியனின் கதிர்களால் பொன்னிறமாக ஜொலிக்கும் இந்த கைலாயம் இன்னும் எவ்வளவோ அதிசயங்களையம் அமானுஷ்யங்களையும் தன்னிடம் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இறைவனால் வெளிப்பட்ட அதிசயங்கள் இன்னமும் முடிவின்றி மனித மூளைகளால் ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கும்போது வெளிவராத கைலாயத்தின் ஆச்சர்யங்கள் எதற்காகவோ அமைதியாக காத்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.