எங்கள் குழந்தைகளை நோய்க் கிருமிகளைப் போல நடத்தாதீர்கள் : அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரும் மூன்று பெண்கள்!!

370

மூன்று பெண்கள்….

பிரித்தானிய பெண்கள் மூவர், கொரோனாவின்போது பள்ளிகளை மூடியது தங்கள் பிள்ளைகளின் மனித உரிமைகளை மீறியதாகக் கூறி அரசாங்கத்தின்மீது வழக்குத் தொடர இருக்கிறார்கள்.

பிரித்தானியாவின் Cambridgeshireஐச் சேர்ந்த Molly Kingsley (41), Liz Morris (46) மற்றும் Christine Brett (48) என்னும் மூன்று தாய்மார்கள், மாகாணச் செயலர் Gavin Williamsonக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, மாணவர்களுக்கு ஏற்படும் நீண்ட கால உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்பட்டதா என்று அவர்கள் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

’நாங்களும் அவர்களும்’ என்ற பிரச்சாரம் ஒன்றைத் துவக்கியுள்ள அந்த மூவரும், ஆரோக்கியமான குழந்தைகள் 12 வாரங்களுக்கு வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அவர்கள் நோய்க் கிருமிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்கிறார்கள்.

இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமுல்படுத்தப்பட இருக்கும் சமூக விலகல் போன்ற கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு நீண்டகால மன நல பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அவர்கள்.

குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பும்போது, மென்மையான பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைக் குறித்தும் இந்த பெண்கள் தங்கள் குழுவினருடன் விவாதித்துவருகிறார்கள்.

அத்துடன், இந்த கட்டுப்பாடுகள் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கைகளுக்கு எதிரானவை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

முன்பு இந்த விடயம் குறித்து வெளிப்படையாக பேச அஞ்சிய சுமார் 2,000 பேர், இப்போது இந்த பிரச்சாரத்தின் பின்னால் அணி திரண்டுள்ளார்கள். தற்போது இந்த தாய்மார்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏன் மனோதத்துவ நிபுணர்களிடமிருந்துகூட பாராட்டுச் செய்திகள் வெள்ளமென குவிகின்றன.