என் பொண்டாட்டி தான் எனக்கு எல்லாமே : வலியால் அவதிப்பட்ட மனைவியை காப்பாற்ற கணவன் செய்த செயல் : மனதை உருக்கும் சம்பவம்!!

754

மனைவியை காப்பாற்ற..

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் வலியால் துடித்த மனைவியை கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவரின் செயல் மனதை உருக்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் 14-ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரின் மனைவி மஞ்சுளா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.

ஆனால் ஊரடங்குச் சட்டத்தால் தமிழகம் – புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன், பேருந்துகள் இயக்கமும் நிறுத்தப்பட்டிருப்பதால் புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார்.

மனைவி வலியால் துடிப்பதைப் பார்த்து கண்ணீர் விட்ட அறிவழகன் அவரை எப்படியாவது காப்பாற்ற முடிவெடுத்தார். அதன்படி தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.

கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர், எவ்வளவு நேரமாகும், என்றெல்லாம் அறிவழகன் யோசிக்கவில்லை. அவரின் சிந்தனை அனைத்தும் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.

எப்படியோ 130 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்த தகவலைக் கேட்ட மருத்துவர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள், அவருக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள், அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து அறிவழகனிடம் மருத்துவர்களிடம் கூறுகையில், என் பொண்டட்டிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லைன்னா நான் இல்ல என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார்.