கணவனை அடித்தே கொலை செய்த மனைவி : நேர்ந்த பரிதாபம்!!

324

ராமநாதபுரம்..

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே இதம்பாடல் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர்( 45). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2011 ஏப்ரல் 11ல் ஊர் திரும்பியநிலையில், ஏப்ரல் 13-ல் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து ஏர்வாடி வடக்குத் தெருவைச் சேர்ந்த இவரது அக்காள் யசோதை ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் காணவில்லை என வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் திருஉத்தரகோசமங்கை சாலையில் பனையடியேந்தல் கிராமம் அருகே களரி கண்மாய் கால்வாய்க்குள் புதைக்கப்பட்டிருந்த தர்மரின் உடல்கூறுகள் மீட்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

மேலும், விசாரணையில் தர்மரின் மனைவி பாண்டியம்மாளுக்கும், பனையடியேந்தலை சேர்ந்த முருகேசன் (39) என்பவருக்கும் பழக்கம் இருந்ததும் தெரிய வந்தது.

கணவர் தர்மர் வெளிநாட்டில் இருந்து வந்ததும், அங்கிருந்து அனுப்பிய பணத்தை மனைவி பாண்டியம்மாளிடம் கணக்கு கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து பாண்டியம்மாள் முருகேசனிடம் கூறியுள்ளார். இதையடுத்து தர்மரை கொலை செய்ய திட்டமிட்டனர். தர்மரை அவரை இருசக்கர வாகனத்தில் வரவழைத்து பனையடியேந்தல் அருகே காட்டுப்பகுதியில் அடித்துக் கொலை செய்து களரி கண்மாய் கால்வாய்க்குள் புதைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் முருகேசன், அவரது நண்பர்கள் மேலமடையைச் சேர்ந்த ரவி, வேந்தோணியைச் சேர்ந்த காளிதாஸ், புத்தேந்தலைச் சேர்ந்த குமார், மனைவி பாண்டியம்மாள் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் நேற்று, தடயங்களை அழித்து கொலை செய்ததற்காக முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தார்.

அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பாண்டியம்மாள் உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.