தேனி…
தமிழக மாவட்டம் தேனியில் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி கூறிய புகாரால், 12 நாட்களுக்கு பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தேனி என்.ஆர்.டி., நகர் செந்தாமரை ( 50). எடமால் தெரு தனியார் பெண்கள் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர். இவரது கணவர் ஆபிரகாம் (54). இருமகள்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி 2 ஆண்டுகளாக பிரிந்தனர். ஆபிரகாம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தாய் வீட்டில் வசித்தார்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் ஜூலை 26-ஆம் திகதி ஆபிரகாம் இறந்துவிட்டார் என அவரது தங்கை, செந்தாமரைக்கு அலைபேசியில் தெரிவித்தார்.
உடல் தேனி அரண்மனைப்புதுார் கோட்டைப்பட்டி ரோடு சி.எஸ்.ஐ., கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக செந்தமாரை பொலிஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து 12 நாட்களுக்கு பின் தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்ரே முன்னிலையில் சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு ஆபிரகாம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. செந்தாமரை முன்னிலையில் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர் கோகுலபாண்டிய சங்கர் பிரேத பரிசோதனை செய்தார்.
உடல் உறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. இறப்புக்கான காரணம் விரைவில் தெரியும் என பொலிஸார் கூறினர்.