கருக்கலைப்புக்கு மாத்திரை சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

297

கள்ளக்குறிச்சி….

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெங்களூரில் கூலி வேலை செய்துவரும் சின்னதம்பி அடிக்கடி சொந்த கிராமத்திற்க்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் செல்வி மூன்றாவது முறையாக கருவுற்றார்.

5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சூளாங்குறிச்சி மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை செய்தபோது குழந்தைக்கு இருதய குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்ய சென்றுள்ளனர். ஆனால், எங்குமே கருக்கலைப்பு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சொந்த ஊரான கீழ்ப்பாடி கிராமத்தில் உள்ள நியு ரோஷிதா மெடிக்கல் நடத்தி வந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி செல்வி சாப்பிட்டு வந்துள்ளார். இதில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார்.

பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே செல்வியின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்புக்காக மெடிக்கலில் இருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்த 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.