உத்தரப்பிரதேசம்…..
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன சிஆர்பிஎஃப் ஜவானின் மனைவி உடல், கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததன் அதிர்ச்சி காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்தர்பால். இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் கீதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகளும் உள்ளது. மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார் இந்தர்பால்.
அப்போது, கடந்த 21 ஆம் தேதியன்று தன்னுடைய மனைவியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், தொலைபேசியை யாருமே எடுக்கவில்லை. பலமுறை அழைத்து பார்த்தும் மனைவி கீதா போனை எடுக்காததால், சந்தேகம் அடைந்துள்ளார் இந்தர்பால். உடனடியாக, அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்தர்பால் அளித்த தகவலின் படி, காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கே கீதா வீட்டில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இது பற்றி தகவலறிந்த இந்தர்பால், மீண்டும் கான்பூர் திரும்பியுள்ளார். தன்னுடைய மனைவியை காணவில்லை என்பது பற்றி புகார் ஒன்றையும் போலீசில் அளித்துள்ளார்.
இந்தர்பால் கொடுத்த புகாரின் பெயரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கீதாவின் மொபைல் போனை சோதனையிட்டு பார்த்த போது, கடைசியாக முக்தர் என்ற கார் மெக்கானிக் ஒருவருடன் கீதா பேசியது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முக்தர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரும், கீதாவை தீர்த்துக் கட்டியதை போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகு, அவரது உடலை கழிவு நீர் தொட்டிக்குள் போட்டுள்ளதையும் முக்தர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கான காரணம் பற்றி, முக்தரிடம் மேலும் விசாரிக்கப்பட்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. முக்தரும், கீதாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேறு ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார் கீதா. இதனை தெரிந்து கொண்ட முக்தர், கீதாவைக் கண்டித்துள்ளார். ஆனால், அதனை கேட்காமல் கீதா இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த முக்தர், கீதாவை போட்டுத் தள்ளத் திட்டம் போட்டுள்ளார். அதன்படி, காரில் கீதாவை அழைத்துச் சென்ற போது, அவரை தீர்த்துக் கட்டி, கழிவு நீர் தொட்டி ஒன்றில் போட்டுச் சென்றது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்தர்பாலுடன் கீதாவின் திருமணம் நடப்பதற்கு முன்பே, முக்தர் மற்றும் கீதா ஆகியோர், மாறி மாறி விருப்பத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதே போல, கீதாவை காரில் வைத்து முக்தர் தீர்த்துக் கட்டிய போது, அவருடன் இன்னும் இரண்டு பேர் இருந்துள்ளார்கள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், முக்தருக்கு உதவி செய்த இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணத்தை மீறிய உறவின் காரணமாக, சிஆர்பிஎஃப் அதிகாரியின் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.