தேனி…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கோபிநாதன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். அங்கு அதே கோவையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் படித்து வந்துள்ளார்.
அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அதன்பின் கல்லூரியில் பார்த்து பேசி ஜாலியாக இருந்த காதல் ஜோடிகள், கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவரும் அவரவர் வீட்டிற்கு பிரிந்து சென்றுவிட்டனர்.
பின்னர் அடிக்கடி இருவரும் வீடியோ கால் மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காதல் ஜோடி இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சில நாட்கள் இருவரும் ஒருவரிடம், ஒருவர் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனிடையே கோபிநாதன், அந்த இளம்பெண்ணிடம் தொடர்ந்து தன்னுடன் பேச வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு வேளை நீ என்னிடம் பேசவில்லை என்றால் உன்னுடைய ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று கூறிவந்துள்ளார்.
இருப்பினும், காதலன் கூறியதற்கு சிறிதளவும் அந்த இளம்பெண் பயப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காதலன் கோபிநாதன், அந்த இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.
இதனை அறிந்த அந்த இளம்பெண் அதிர்ச்சியில், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.