காதலை புறக்கணித்து வந்த சத்யா கொலை வழக்கில் சதீஷ் அதிர்ச்சி வாக்குமூலம்!!

1104

சென்னை…….

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் – ராமலட்சுமி (43) தம்பதியினர். ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் மாணிக்கத்திற்கு சத்தியப்பிரியா (20) என்ற மகள் இருந்தார். இவர் தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார்.

சத்தியப்பிரியாவை அதே பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் மகனான சதீஷ்(23) காதலித்து வந்ததாகவும், அவரிடம் தனது காதலை சொல்லியும், சத்தியா புறக்கணித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த அக்டோபர் 13-ம் தேதி பரங்கிமலை இரயில் நிலையத்தில் தனது தோழிகளுடன் வந்த சத்தியாவை பின்தொடர்ந்துள்ளார். அப்போது அவரை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார இரயில் வரும்போது தள்ளி விட்டுள்ளார்.

இதில் இரயிலில் சிக்கிய சத்தியா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். பின்னர் குற்றவாளி சதீஷயும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே தனது மகளின் இறப்பு தாங்கமுடியாத சத்தியாவின் தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதலிக்க மறுத்ததால் கொலை செய்ததாக சதீஷ் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து கொலையை எவ்வாறு செய்தார் என்பது குறித்து விசாரிப்பதற்காக ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தானும், சத்தியாவும் 2 ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும், எங்கள் காதலுக்கு சந்தியாவின் தாய் சம்மதிக்கவில்லை என்றும், மேலும் அவரது பேச்சை கேட்டு சத்தியா என்னிடம் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

சத்தியா பேசுவதை நிறுத்தினாலும், தான் அவரின் பின்னால் சென்று முயற்சித்ததாகவும், ஆனால் அவருக்கு அவரது உறவினர் பையன் ஒருவருடன் நிச்சயம் வைக்க முடிவு செய்ததாகவும், இதனால் தான் ஆத்திரப்பட்டு கொலை செய்ய நினைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

அதன்படி தொடர்ந்து 10 நாட்கள் சத்தியாவை பின்தொடர்ந்த சதீஷ், அதில் 3 நாட்கள் பரங்கிமலை இரயில் நிலையத்தில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி செய்கையில் அவர் மீது உள்ள அதீத காதலால் கொலை செய்ய மனம் ஒப்பமால் திரும்பியுள்ளார்.

பிறகு சம்பவத்தன்று தோழிகளுடன் பரங்கிமலை இரயில் நிலையத்திற்கு வந்த சத்தியாவை கண்ட சதீஷ், என்ன செய்வதென்று குழப்பத்திலும் சந்தேகத்திலும் சத்தியாவை மறைந்து பின்புறத்தில் இருந்து இரயில் வருகையில் தள்ளி விட்டு கொலை செய்ததாக சதீஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சதீஷின் இந்த வாக்குமூலத்தை பெற்ற CBCID போலிசார், அவரை வரும் நவம்பர் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பெற்று தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவரது வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.