மதுரை…..
மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதியருக்கு பாலாஜி (21) என்ற மகன் உள்ளார். இவர் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும் திருப்பூர் கல்லுாரியில் படிக்கும் பவித்ராவுக்கும், ஐந்து ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இது பவித்ராவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. எனவே அவரது குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு ஓராண்டுக்கு முன் திருப்பூர் சென்றுவிட்டனர்.
பாலாஜிக்கு பவித்ராவை மறக்க முடியாததால், கடந்த வாரம் மதுரை பசும்பொன்நகர் நீலகண்டன் கோவிலில் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று பவித்ரா – பாலாஜி தம்பதியினர் தலைதீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் முன்பாக பவித்ரா பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பவித்ராவின் சித்தப்பா கார்த்தி (40) என்பவர் திடீரென பவித்ராவின் முகத்தில் பெட்ரோலை ஊற்றியுள்ளார்.
அப்போது பட்டாசில் இருந்து வெளியேறிய தீப்பொறி பற்றி பவித்ராவின் முகம் மற்றும் தோளில் தீகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சம்பவ இடத்தில் இருந்து தப்ப முயன்ற கார்த்தியை பவித்ராவின் கணவரான பாலாஜியின் நண்பர்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த எஸ்எஸ்.காலனி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பவித்ரா காதலித்து திருமணம் செய்தது அவரது சித்தப்பாவிற்கு பிடிக்காத நிலையில் மதுபோதையில் பெட்ரோல் ஊற்றியது தெரியவந்துள்ளது.
தலைதீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்த தனது உடன் பிறந்த அண்ணன் மகள் மீது சித்தப்பாவே பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.