காலசர்ப தோஷத்திற்கு சிறந்த எளிய பரிகார முறைகள்!

1473

கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது போன்றவையும் எல்லாம் நாக தோஷத்தினால் ஏற்படுவது என்பது நம்பிக்கை.ராகு – கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம்.இதற்கான சிறந்த பரிகாரத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.

சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும்.தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம்.

தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத் தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.

கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.

வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும்.அதை நெய்வேத் தியம் செய்து தானம் செய்யலாம்.

கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடைகள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.ராகு, தோஷம் ஏற்பட்டு பருவ மடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும்.

செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும்.புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வர வேண்டும்.

ராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித் தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்கு பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.தினசரி துர்க்கை அம்மனுக் குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வரவேண்டும்.

பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்