காலா திரைப்படத்துக்கு தடை இல்லை: அதிரடி உத்தரவு!

564

கர்நாடகத்தில் காலா திரைப்படம் வெளியிடப்பட உள்ள திரையரங்குகளுக்கு அந்த மாநில அரசு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ரஜினி நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாளான 7 ஆம் திகதி உலகம் முழுவதிலும் வெளியாகிறது.ஆனால் கர்நாடகாவில் காலா படத்தை திரையிட அனுமதிக்கப்போவதில்லை என்று கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளதோடு திரைப்பட வர்த்தக சபையும் இப்படத்திற்கு தடை விதித்துள்ளது.

இதற்கெதிராக காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.காலா திரைப்படத்தை கன்னட மக்கள் விரும்பவில்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ள நிலையில் கர்நாடகத்தில் போதிய பாதுகாப்பு கிடைக்காது என்று தனுஷ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் படத்திற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும், கன்னட அமைப்புகள்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்புவிவாதங்களையும் கேட்ட மாண்புமிகு நீதிபதி நாகேந்திரா அவர்கள், காலா திரைப்படம் வெளியிடப்படுவதற்கு கர்நாடக அரசு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

காலா படத்தை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடாமல் இருப்பது தான் நல்லது என கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.