குப்பை சேகரிக்கும் பெண்மணி குறும்பட இயக்குனர் ஆன வெற்றி கதை!

743

குப்பை சேகரித்து கொண்டிருந்த பெண்மணி ஒருவர் தன் சுய முயற்சியால் தற்போது குறும்பட இயக்குனர் ஆகியுள்ளார்.அவரை பற்றிய சுவாரசியமான பதிவைத் தான் பார்க்கப் போகிறோம்,

தனது கையில் விலையுர்ந்த புகைப்படக்கருவி இருப்பதை பார்த்த இரண்டு காவல்துறையினர் கேள்விகள் எதுவும் கேட்காமல் இவரை அறைந்து இருக்கின்றனர்.

மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் குப்பை சேகரிக்கும் பெண்ணான மாயா கொட்வே இப்படித்தான் தனது புகைப்படமெடுக்கும் பயிற்சியை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

நாசிக்கை சேர்ந்த ஒரு அமைப்பு குப்பை பொறுக்கும் சில பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புகைப்பட பயிற்சி அளிக்க ஒரு காரணம் இருந்தது.

குப்பை பொறுக்கும் பெண்களின் வாழ்நிலையை அவர்களாகவே குறும்படமாக எடுத்துக் கொள்ளும் பொருட்டு இவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஊக்குவித்துள்ளது.அதில் ஒருவர்தான் மாயா.

பயிற்சியின் போது ஒருமுறை குப்பை கூடத்திற்கு இவர்களை அழைத்து சென்று புகைப்படமெடுக்க சொல்லியிருக்கின்றனர். இடைவேளை சமயத்தில் அனைவரும் தேநீர் அருந்த சென்றுள்ளனர். அப்பொழுது மாயா மட்டும் மேலும் சில புகைப்படங்கள் எடுப்பதற்காக அங்கேயே இருந்து அவைகளை எடுத்து கொண்டிருந்தார்.

அந்த வழியாக வந்த இரு காவலர்கள் அவரிடம் விலை உயர்ந்த காமிரா இருப்பதை பார்த்ததும் அவரை அது பற்றி எதுவும் கேட்காமல் அறைந்துள்ளனர்.

இதுபற்றி குறிப்பிடுகையில் ”என்னை போன்ற குப்பை பொறுக்கும் பெண்ணிடம் எப்படி இது கிடைத்திருக்கும் ஒருவேலை நான் திருடியிருக்கலாம் என அவர்கள் நினைத்திருக்கலாம் என்றார் மாயா.

முன்பு தன்னிடம் காமிரா இருந்ததால் தாக்கப்பட்ட மாயா இப்போதெல்லாம் தனது ஆயுதமே காமிரா தான் என்கிறார். காரணம் இப்போது இவர் ஒரு குறும்பட மற்றும் ஆவணப் பட இயக்குனர்.

தனது தாயுடன் இளம் வயதிலிருந்தே குப்பை பொறுக்கும் வேலைக்கு தள்ளப்பட்ட மாயா தனது கல்விக்கான சூழ்நிலை அமையவில்லை என்கிறார்.

கல்வி கற்கும் சூழல் இல்லாததால் குப்பை பொறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இவர் போன்ற மனிதர்களை இந்த சமூகம் குப்பை போன்றே நடத்தி வருகிறது.

நாங்கள் சாலையில் நடந்து செல்லும்போது மனிதர்கள் ஒதுங்குவதும் முகத்தை மூடி கொள்வதும் எங்களுக்கு மன வலியைத் தான் தருகிறது என்கிறார் மாயா.

பிறர் வாழ்வு சுத்தமாக இருக்க நாங்கள் அசுத்தங்களை நீக்குகிறோம். ஆனாலும் ஏன் அவர்கள் எங்களை மோசமாக நடத்த வேண்டும் என்ற ஆதங்கம் மாயாவிற்கு நீண்ட நாட்களாகவே இருந்துள்ளது.

இந்த எண்ணமே நாசிக் நிறுவனமான அபிவியக்தி ஊடக பயிற்சி நிறுவனத்தில் இவரை கலந்து கொள்ள தூண்டியுள்ளது. 2011ஆவது ஆண்டு இந்நிறுவனம் இவருக்கு புகைப்பட துறையில் பயிற்சி அளித்தது இருப்பினும் சில வாரங்களில் திடீரென பயிற்சி அளிக்கும் நிறுவனம் தங்கள் பயிற்சியை கைவிட்டுள்ளது.

அதன் பின் தங்கள் நியாயத்தை எப்படி வெளிக்காட்டுவது என்கிற கவலையில் இருந்த மாயாவிற்கு 2013ஆம் ஆண்டு வீடியோ தன்னார்வலர்கள் என்கிற அமைப்பு உதவ தொடங்கியுள்ளது.

வீடியோக்கள் மூலம் சமூக நீதியை பகிர்வதுதான் இந்த அமைப்பின் நோக்கம். அவர்களுக்காக வேலை செய்ய தொடங்கிய மாயா முதல் முறையாக தனது புகைப்பட கலைக்கான ஊதியத்தையும் பெற தொடங்கினார்.

தனது முதல் காணொளியாக தனது வீட்டின் அருகே உள்ள பகுதியில் கழிவு நீர் குழாய் உடைந்து முழுவதும் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனை காணொளியாக எடுத்து அங்குள்ள அரசு அலுவலக அதிகாரிகளிடம் காட்டியுள்ளார் மாயா.

அதனை பார்த்த பிறகு ஞாயிற்றுக்கிழமையான அன்று அந்த அலுவலர்கள் வந்து அங்குள்ள கழிவு நீர் குழாயை சரி செய்தனர் என்று பெருமையுடன் தனது முதல் வெற்றியை குறிப்பிடுகிறார்.

எழுத படிக்க தெரியாத மாயா தனக்கு தனது எண்ணங்களை வெளிப்படுத்த புகைப்படக் கருவியையே சாதகமாக்கி வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

குப்பை பொறுக்கும் மனிதர்களின் அவல நிலையை உலகிற்கு காட்ட முடிவு செய்த மாயா உங்கள் பிரச்னையை யாரும் கேட்வில்லை என்றால் உங்கள் பிரச்சனை என்ன என்று அவர்களிடம் நீங்கள் காட்ட வேண்டும் என்கிறார்.

என்னுடைய முதல் காணொளியில் அதனை அருகில் இருந்து பார்த்த மக்கள் கேலி செய்தனர். எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக கூட நினைத்தனர். ஆனால் அதன் மூலம் ஒரு உடனடி தீர்வு கிடைத்த போது ஏளனம் செய்த அனைவரும் கொண்டாடினர் என்கிறார் இவர்.

கல்வியறிவற்ற மாயாவினால் புகைப்பட தொழிநுட்பத்தை எப்படி புரிந்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்விக்கு முன்பெல்லாம் பட தொகுப்பு மற்றும் தொழிநுட்பம் குறித்த எதையும் நான் அறிந்திருக்கவில்லை ஆனால் குறைந்த வார்த்தையில் அதிக புரிதலை ஏற்படுத்த தொழிநுட்ப சொற்கள் மற்றும் மென்பொருள்கள் பற்றியும் நான் அறிந்து கொண்டேன்.

இருப்பினும் தொழிநுட்ப தகவல்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்ததால் மிகவும் போராடித்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது என்கிறார் இந்த சிகர பெண்மணி.

இத்தனை போராட்டத்திற்கு பிறகு குப்பை பெருக்குவதில் இருந்து குறும்பட இயக்குனராக உயர்ந்திருக்கும் மாயா தன்னை போலவே இன்னும் பல மாயாக்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்கிறார்.மேலும் பல சமூக நலன் மேம்படுகளுக்காக குரல் கொடுத்தும் வருகிறார்.