குறும்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய கணவன்… அதனால் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

424

ராமச்சந்திரன்…..

கணவர் வேலைக்குச் செல்லாமல் குறும்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி பொழுதைக் கழித்து வந்ததால் மன உளைச்சலில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் நீலம் தோட்டம் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் தாய் இல்லாமல் தந்தை மற்றும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கீர்த்தனா பல்பொருள் அங்காடி ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்த நிலையில், ராமச்சந்திரன் குறும்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது.

தாய் பாசமின்றி வளர்ந்த கீர்த்தனா தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து யாரிடம் சொல்வதென்று அறியாமல் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே மன வருத்தத்தில் கணவருடனும் உரையாடல்களை தவிர்த்து வந்த கீர்த்தனா கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மயக்க நிலையில் இருந்த கீர்த்தனாவை கண்ட கணவர் ராமச்சந்திரன் உடனடியாக அவரை அருகிலுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண் கீர்த்தனா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் இந்த வழக்கை ஆர்.டி.ஓ விசாரணைக்கு செம்பியம் உதவி ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். கணவரின் செயல்பாடுகளால் இளம்பெண் எடுத்த இந்த முடிவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.