குளிர்சாதன பெட்டி வெடித்து 3 பேருக்கு நேர்ந்த சோகம் : விபத்து எப்படி நிகழ்ந்தது?

1198

செங்கல்பட்டு…..

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த, வெங்கட்ராமன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து அவருக்கு தாம்பரம் பகுதியில் திதி கொடுப்பதற்காக, துபாயில் வசித்து வந்த வெங்கட்ராமனின் மனைவி கிரிஜா ( 63) அவரது தங்கை ராதா (55) , அவரது தம்பி ராம்குமார் (47) , ராம்குமாரின் மனைவி பார்கவி (35) மற்றும் அவருடைய மகள் ஆராதனா (6) ஆகியோர் கடந்த 2ம் தேதி ஊரப்பாக்கம் வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஆர்ஆர் பிருந்தாவன், அப்பார்ட்மெண்டில் உள்ள முதல் மாடியில் , தூங்கிக் கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை நான்கு மணியளவில் எதிர்பாராத விதமாக, வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்காரணமாக, அதிலிருந்து புகை வெளியேறியதை தொடர்ந்து, தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அலறி அடித்து கூச்சலிட்டுள்ளனர்.

கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது மூச்சு திணறி கிரிஜா, ராதா , ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகிய இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தில் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல்நாத் கூறுகையில்,

முதற்கட்டமாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. ஒரு வருடங்களுக்கு மேலாக இந்த வீடு பூட்டி இருந்துள்ளது. இதன் காரணமாக மின்சார சாதனங்கள் ஆகியவை பழுதடைந்து இருக்கலாம், அதை பயன்படுத்திய காரணத்தினாலேயே, இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், மாவட்டத்தில் இருக்கும் பொது மக்கள் யாரும் பழுதடைந்த மின்சார பொருட்களை பயன்படுத்த வேண்டாம், அதேபோல் சிறிது காலம் பயன்படுத்தாமல் இருக்கும் மின்சார பொருட்களை, டெக்னீசியன் அறிவுறுத்தலின்படி பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.