கோடைக்காலத்தில் வரும் தொல்லைகள்: இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்

930

கோடை காலம் வந்துவிட்டாலே வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். அதாவது சருமப் பிரச்சனை, கை, கால் மற்றும் கண் எரிச்சல், போன்றவை வெயிலின் கொடுமையால் நம்மை தாக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகும்.

இவற்றை எல்லாம் தடுக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும். இப்பிரச்சனைகளில் இருந்து ஈஸியாக தப்பிக்கலாம்.

வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவுகளான மோர், தேங்காய் நீர், எலுமிச்சை சாறு, தர்பூசணி, கிர்ணி , வெள்ளரிக்காய், பச்சடி , சுரக்காய் . போன்ற காய்கறி மற்றும் பழங்களை அடிக்கடி சாப்பிடலாம்.

மேலே கூறப்பட்ட டயட்டுடன் சேர்த்து, சில எளிய அழகு குறிப்புகளும் பின்பற்றி இந்த வெயிலின் சூட்டை தணித்துக் கொள்ளலாம். பெண்கள் இவற்றைப் படித்து முயற்சித்து வெயில் காலத்தை குளிர்ச்சியாக மாற்றிக் கொள்ளலாம்.

கை மற்றும் கால் பாதங்களில் அதிக எரிச்சலை உணர்பவர்கள், பாகற்காயை நறுக்கி, அதனை பாதத்தில் மற்றும் உள்ளங்கையில் தேய்த்தால், உடலில் குளிர்ச்சித் தன்மையை உணரலாம்.

வெயில் காலத்தில் கண் எரிச்சல் ஏற்படும் போது டீக்கு பயன்படுத்திய டீ பைகளை ஃபிரீசரில் சில நிமிடம் வைத்திருந்து அவை குளிர்ந்தவுடன் எடுத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு பஞ்சை பன்னீரில் நனைத்து அல்லது வெள்ளரிக்காயை வட்ட வடிவத்தில் நறுக்கி கண்களில் வைத்துக் கொள்ளலாம்.

பன்னீரை எப்போதும் ஃ பிரிட்ஜில் வைத்து, அடிக்கடி அதனை எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தெளித்து கொண்டால், பொலிவான சருமத்தினை பெறலாம்.

தர்பூசணியை உட்கொண்டவுடன் அதன் தோலை தூக்கி எறியாமல், பிரிட்ஜில் வைத்து வெளியில் சென்று வந்தவுடன் அந்த தோலை முகம், கண்கள், கை காலில் தேய்த்துக் கொண்டால், நல்ல புத்துணர்ச்சி உண்டாகும்.

ஒரு தக்காளியை 2 துண்டுகளாக நறுக்கி ஃபிரீசரில் வைத்து நன்கு குளிர்ந்தவுடன் அவற்றை எடுத்து சருமத்தில் அந்த சாறு இறங்கும்படி வைத்து தேய்த்தால் சரும வறட்சி நீங்கும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து ஆறியதும், அந்நீரில் தலைக்கு குளித்து வந்தால் தலையில் வெயில் கால கட்டிகள் வராது.

வறண்ட தலைமுடி இருப்பவர்கள் , முல்தானி மட்டியுடன் பால் சேர்த்து பேஸ்ட் போல கலந்துக் கொண்டு, அதை தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும்.

எண்ணெய்ப் பசை தன்மை கொண்ட தலைமுடி உள்ளவர்கள், முல்தானி மட்டியுடன் தயிர் சேர்த்து இந்த கலவையை தலையில் தடவலாம். பிறகு 15 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும்.

கோடைக்கால வெயிலால் அதிகம் வியர்த்து உடல் துர்நாற்றம் ஏற்படும். அதற்கு குளிக்கும் போது அந்த நீரில், எலுமிச்சை சாறு, நல்ல வாசனை திரவியங்களை கலந்து குளிக்க வேண்டும்.