கேரளா…
கேரளா மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி பேபி. இந்த தம்பதிக்கு விபின் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர்.
தொழிலாளியான வாசு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் இளைஞன் விபின் கவனித்து வந்தார்.
இந்நிலையில் வித்யா, நிதின் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இது குறித்து இருவீட்டாருக்கும் தெரிந்ததை அடுத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர் இவர்களின் திருமணத்தை டிசம்பர் 12ஆம் தேதி நடத்துவது என நிச்சயக்கப்பட்டது.
காதலித்து திருமணம் செய்வதால் நிதின் வரதட்சணை வேண்டாம் என பெண் வீட்டாரிடம் கூறியுள்ளார். ஆனால் தங்கைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விபின் நினைத்துள்ளார்.
இதற்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் கேட்டுள்ளார். முதலில் கடன் தருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சகோதரிக்கு நகைகளை வாங்குவதற்காக நகைக்கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர், வங்கிக்குச் சென்று பணம் குறித்துக் கேட்டபோது வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துள்ளது. இதனால் மனமுடைந்த விபின் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி அறிந்து சகோதரியும், தாயும் மற்றும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.
இதையடுத்து கல்யாண மாப்பிள்ளை நிதின் திருமணம் குறித்து பெண் வீட்டாரிடம் பேசியுள்ளார். பிறகு சில நல்லுள்ளங்கள் விபின் விரும்பியபடியே சகோதரிக்கு நகைளை வாங்கி நிதியுதவி செய்துள்ளனர்.
பின்னர் நிதின் – வித்யா திருமணம் கடந்த 29ஆம் தேதி திருச்சூரில் எளிமையான முறையில் கோயிலில் நடைபெற்றது.
தற்கொலை செய்து கொண்ட சகோதரனின் ஆசைப்படி சகோதரியின் திருமணத்திற்கு நகைளை வாங்க சிலர் உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.