சாதாரண செருப்பு பிரச்சனையில் கடை உரிமையாளரை ஓட ஒட வெட்டிய வாலிபர் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

870

கிருஷ்ணகிரி…

கிருஷ்ணகிரியை அடுத்த மோகன் ராவ் காலனியைச் சேர்ந்தவர் ஃபைசு. இவர் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே சொந்தமாக செருப்பு விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் ஃபைசு கடையில் 1,500 ரூபாய் மதிப்பிலான காலணி ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், காலணியை வாங்கி சென்ற லோகேஷ், மீண்டும் கடைக்கு வந்து, தான் வாங்கிய காலனியை வேண்டாமென கூறி அதற்கான தொகையை திரும்ப கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கடை உரிமையாளர் பைசு, வேணுமென்றால் வேறு காலணி மாற்றித் தருகிறேன், பணத்தை திரும்ப தர இயலாது என்று கூறியுள்ளார்.

இதனால் பைசு மற்றும் லோகேஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே, லோகேஷை பைசுவின் நண்பர்கள் தாக்கிவிட்டனர். இதில் லோகேஷ் பலத்த காயமடந்தார். பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார், இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, நேற்று காலை வழக்கம்போல் பைசு தனது கடையை திறக்க வரும்போது, திடீரென லோகேஷ் கையில் அரிவாளுடன் பைசுவை வெட்ட துரத்தியுள்ளார். அந்த சமயத்தில், செய்வதறியாது திகைத்த பைசு, லோகேஷிடம் இருந்து தப்பிப்பதற்காக சாலையில் ஓடியுள்ளார்.

இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற லோகேஷ் அவரின் தோள்பட்டை, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஏற்கனவே நடந்த பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தான் லோகேஷ், பைசுவின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து வழக்குப்பதிவு செய்து போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு லோகேஷை தேடி வருகின்றனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயம் அடைந்த பைசுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் கிருஷ்ணகிரி நகரின் பரபரப்பு நிறைந்த சாலையில் பட்டப்பகலில் ஒருவர் ஓட ஓட துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.