இந்திய மாநிலம்…
இந்திய மாநிலம் கேரளாவில் ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த இளைஞர், அந்த ரிசார்ட்டிற்கு வெளியே சாலையருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் 3 வயதேயான இரட்டையர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சடலத்தின் அருகே அழுத நிலையில் காணப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் நாளிதழ்களை விநியோகிக்கும் சிலரே அதிகாலையில் இந்த துயர சம்பவத்தை முதலில் கண்டறிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மரணமடைந்தவர் 29 வயதான ஜிதின் எனவும், இரட்டையர்களான தமது பிள்ளைகளுடன் 6 நாட்களுக்கு முன்னர் குறித்த ரிசார்ட்டில் தங்குவதற்காக சென்றுள்ளார்.
இவரது மனைவி கிறிஸ்டினா ரஷ்ய நாட்டவர் என தெரிய வந்துள்ளது. கோவா மாநிலத்தில் தொழில் செய்து வந்த ஜிதின், கொரோனா பரவல் காரணமாக கேரளா திரும்பியுள்ளார்.
மனைவி கிறிஸ்டினா வேலை தொடர்பாக பெங்களூருவில் தங்கியிருப்பதாலும், தங்களது குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாலும் பிள்ளைகள் இருவருடன் ஜிதின் ரிசார்ட்டில் தங்க சென்றுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பு காரணமாக ஜிதின் மரணமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் உடற்கூராய்வுக்கு பின்னரே, உண்மை காரணம் வெளிவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.