சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாத பெற்றோர் : மூடநம்பிக்கையால் சிறுமிக்கு நேர்ந்த கதி!!

297

பாத்திமா..

உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வது மிகவும் இயல்பானது மட்டுமல்ல அவசியமானதும் கூட. ஆனால் சிலர் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது தவறு என கருதி மாந்ரீக அல்லது மத விஷயங்களின் மேல் நம்பிக்கை வைத்து விபரீத முடிவுகளை சந்திக்கின்றனர்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நல்லுவயல் எனும் ஊரைச் சேர்ந்த அப்துல் சத்தார் மற்றும் சபீரா என்ற தம்பதியர் மூடநம்பிக்கை காரணமாக தங்களின் 11 வயது மகளுக்கு எமனாக மாறியிருக்கின்றனர்.

சத்தார் மற்றும் சபீரா தம்பதியரின் 11 வயது மகள் பாத்திமா அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பாத்திமாவுக்கு சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளார். ஆனால் பாத்திமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவளின் பெற்றோர் இருந்து வந்துள்ளனர். ஏனென்றால் அத்தம்பதியர், மத நம்பிக்கை மற்றும் மாந்ரீக சக்தி தங்களின் மகளை குணப்படுத்தும் என மூடநம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால் பாத்திமாவின் உடல்நிலை நாளாக நாளாக மோசமடைந்தது, காய்ச்சலும் கடுமையாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு பேச்சு மூச்சின்றி இருந்ததால் வேறு வழியில்லாமல் பதற்றமடைந்த அவரின் பெற்றோர், சிறுமியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமி பாத்திமாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வாழவைக்க வேண்டிய பெற்றோரே அலட்சியமாக இருந்து சிறுமியின் உயிர் பறிபோக காரணமாக இருந்துள்ளனர். காலதாமதமாக மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக முன்னதாகவே வந்திருந்தால் சிறுமியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சத்தார், சபீரா தம்பதியர் தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மூடநம்பிக்கையால் பாத்திமாவை கொலை செய்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமி பாத்திமாவின் மரணம் இயற்கைக்கு எதிரான மரணம் என குறிப்பிட்டு போலீசார் விசாரித்துவருகின்றனர்.

சத்தார், சபீரா குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் கடந்த ஆண்டு இதே போல உரிய மருத்துவம் பார்க்காததால் பலியானதாக ஊர்க்காரர்கள் தெரிவித்தனர். எனவே போலீசார் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.