சில்வர் பானைக்குள் சிக்கிய சிறுவனின் தலை…! விளையாட்டு வினையானது..!

464

தெலங்கானா…….

பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் பானைக்குள் தலையை நுழைத்து விளையாடும் தவக்களையின் தலை உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படும் காட்சி நகைப்பாக இருந்தாலும், பானையை வைத்து விளையாடும் சிறுவர்களுக்கு எச்சரிக்கை பாடம். இதே போன்றதொரு நிஜ சம்பவம் தெலங்கானா மா நிலம் கரீம் நகரில் நடந்துள்ளது.

அங்குள்ள சங்கரபட்டினத்தை சேர்ந்த ராஜூ – காவியா தம்பதியரின் 6 வயது சுட்டிப்பையன் ரோகித், தனது தந்தையுடன் ஓடியாடி விளையாண்ட சிறுவன், அங்கிருந்த சில்வர் பானையை எடுத்து அதற்குள் தலையை விட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அவனது தலை சில்வர் பானைக்குள் வசமாக சிக்கிக் கொண்டது.

அவனது தலையில் சிக்கிய சில்வர் பானையை எடுப்பதற்கு பல்வேறு விதமாக முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டாலும், சிறுவன் அலறியதால் பானையை எடுக்க இயலவில்லை. சிறுவனை பானையுடன் தாய் வைத்துக் கொண்டு காத்திருந்தார்.

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்களது அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்ந்தனர், சிறுவனின் தலையில் தீப்பொறி படாதவகையில் போர்வையை வைத்து எலெக்ட்ரானிக் கருவி கொண்டு சில்வர் பானையை அறுத்தெடுத்தனர்.

சிறுவனின் தலை பானைக்குள் சிக்கி 6 மணி நேரம் கடந்த நிலையில் சுமார் 2 மணி நேரம் பொறுமையாக மீட்பு பணியை மேற்க் கொண்டு, சிறுவனுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி கவனமாக பானையை இரண்டாக பிளந்து சிறுவனை காப்பாற்றினர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்பதை கவனிக்க மறந்தால் இது போன்ற விபரீத விளையாட்டுக்கள் வினையாகி விடும் என்று தீயணைப்புத்துறையினர் எச்சரித்துச்சென்றனர்.